தை அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றில் குவிந்த பக்தர்கள்; 11 மாதத்துக்கு பிறகு பரிகாரம் செய்ய அனுமதித்ததால் மகிழ்ச்சி

தை அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 11 மாதத்துக்கு பிறகு பரிகாரம் செய்ய அனுமதித்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2021-02-11 22:29 GMT
கொடுமுடி
தை அமாவாசையையொட்டி கொடுமுடி காவிரி ஆற்றில்  ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 11 மாதத்துக்கு பிறகு பரிகாரம் செய்ய அனுமதித்ததால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 
மகுடேஸ்வரர் கோவில்
கொடுமுடியில் மிகவும் பிரசித்தி பெற்ற மகுடேஸ்வரர், வீரநாராயண பெருமாள் கோவில் உள்ளது. மும்மூர்த்திகள் தலமாக விளங்கும் இந்த கோவிலுக்கு ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை மற்றும் தை அமாவாசை நாட்களில் ஏராளமான பக்தர்கள் வந்து சாமியை வழிபடுவர். மேலும் இங்குள்ள காவிரி ஆற்றில் புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுப்பார்கள். அதுமட்டுமின்றி செவ்வாய் தோஷம், நாக தோஷம் மற்றும் திருமண தடை நீங்க பரிகாரங்களும் செய்யப்படும். எனவே பரிகாரம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் இங்கு வருவர். இந்த நிலையில் கொரோனா தொற்று காரணமாக திதி, தர்ப்பணம் கொடுக்கவும், பரிகாரம் செய்யவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. 
பக்தர்கள் மகிழ்ச்சி
இந்த நிலையில் அரசின் சார்பில் கொரோனா ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி கொடுமுடி காவிரி ஆற்றின் கரையில் பக்தர்கள் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும், பரிகாரம் செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. 
இதைத்தொடர்ந்து கொடுமுடி காவிரி ஆற்றின் கரையில் திதி மற்றும் தர்ப்பணம் கொடுக்கவும், பரிகாரம் செய்யவும் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதற்காக தமிழ்நாட்டின் பிற மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து கொடுமுடிக்கு வந்த பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தங்களுடைய முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்தனர். மேலும் பல பக்தர்கள் பல்வேறு தடைகள் நீங்க பரிகார பூஜைகளும் செய்தனர். 11 மாதங்களுக்கு பிறகு பரிகாரம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். 
அனுமதி சீட்டு
பின்னர் அவர்கள் அங்குள்ள கோவிலுக்கு சென்று மகுடேஸ்வரர், சவுந்தரநாயகி, வீரநாராயண பெருமாள், மகாலட்சுமி, பிரம்மா, ஆஞ்சநேயர், காலபைரவர், சனீஸ்வரர் மற்றும் நவகிரக சன்னதிகளுக்கு சென்று சாமி வழிபட்டனர். 
இதையொட்டி கோவிலுக்குள் வயதானவர்கள், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகள் அனுமதிக்கப்படவில்லை. மேலும் பக்தர்கள் அனைவரும் முக கவசம் அணிந்துதான் கண்டிப்பாக கோவிலுக்குள் வரவேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டது. அதுமட்டுமின்றி கோவிலில் உரிய அனுமதி சீட்டு பெற்ற பக்தர்கள் மட்டுமே பரிகாரம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். அங்குள்ள மணல்மேடு பகுதிக்கு எந்த பக்தர்களும் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ் மற்றும் கண்காணிப்பாளர் மாணிக்கம் ஆகியோர் செய்திருந்தனர். இதையொட்டி கோவில் மற்றும் காவிரி ஆற்றின் படித்துறை பகுதியில் கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்