பல்லடம் அருகே நூற்பாலையில் தீப்பிடித்தது

பல்லடம் அருகே நூற்பாலையில் தீப்பிடித்தது

Update: 2021-02-11 18:32 GMT
பல்லடம்:-
பல்லடம் அருகே நூற்பாலையில் தீப்பிடித்ததில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள், எந்திரங்கள் எரிந்து நாசமானது.
இந்த விபத்து பற்றி கூறப்படுவதாவது:-
நூற்பாலையில் தீப்பிடித்தது
 திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாணிக்காபுரம் ராசாகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் குமாரசாமி (வயது 48). இவர் அந்தப்பகுதியில் கடந்த 10 வருடங்களாக நூற்பாலை நடத்தி வருகிறார். இந்த ஆலையில் ஒரு ஷிப்ட்டுக்கு 50 தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று மதியம் நூற்பாலையில் 50 தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டு இருந்தனர். அப்போது நூற்பாலைக்குள் திடீரென மின்கசிவு ஏற்பட்டு தீப்பிடித்து எரிந்தது. இதையடுத்து உள்ளே வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர்.
பொருட்கள் எரிந்து சேதம்
 தீ விபத்து குறித்து உடனடியாக பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதற்குள் பஞ்சு இருப்பு அறை  மற்றும் பஞ்சு கலவை அறை  ஆகியவற்றில் தீ மளமளவென பற்றி அங்கிருந்த எந்திரங்கள் மற்றும் பஞ்சு மூட்டைகளில் தீப்பிடித்து எரிந்து சாம்பலானது. 
இந்த தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பஞ்சு மூட்டைகள் மற்றும் எந்திரங்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. அதிர்ஷ்டவசமாக தீ விபத்தில் அங்கிருந்த 50 தொழிலாளர்கள் காயம் எதுவுமின்றி தப்பினர். தீ விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்