கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பலி

தோகைமலை அருகே கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-02-11 18:14 GMT
தோகைமலை
பள்ளி மாணவி 
கரூர் மாவட்டம், தோகைமலை அருகே உள்ள தொண்டமாங்கினம் ஊராட்சி, கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி. இவர் ஈரோட்டில் தங்கி நெல் கதிர் அறுக்கும் கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சந்தியா (வயது 12). இவர் கவுண்டம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார்.  இந்நிலையில் நேற்று மாலை 4 மணி அளவில் அப்பகுதியில் உள்ள பிச்சைக்காரன் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றுக்கு துணி துவைப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் சந்தியா சென்றுள்ளார். இதையடுத்து 2 பேரும் கிணற்றில் துணியை துவைத்து விட்டு குளித்து முடித்தனர். 
கிணற்றில் தவறி விழுந்து பலி
பின்னர் சந்தியா தனது வாளியை தூக்கிக்கொண்டு கிணற்றின் படிக்கட்டு வழியாக மேலே ஏறி வந்தார். அப்போது சந்தியா கால் தவறி படிக்கட்டில் இருந்து கிணற்றில் தவறி விழுந்தார். நீச்சல் தெரியாததால் அவர் கிணற்றில் தத்தளித்தார். 
இதைக்கண்ட அங்கிருந்த பெண் காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டார். இதையடுத்து அக்கம், பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் சந்தியா கிணற்றில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதையடுத்து சந்தியாவின் உடலை அக்கம், பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்