காரைக்குடி-தூத்துக்குடி ரெயில்பாதை அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

காரைக்குடி,தூத்துக்குடி ரெயில்பாதை அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Update: 2021-02-11 14:49 GMT
ராமநாதபுரம்,
காரைக்குடி-தூத்துக்குடி ரெயில்பாதை அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலைவாய்ப்பு
வேலையில்லா திண்டாட்டம், வறுமை, வறட்சி, தொழில் வளர்ச்சியின்மை மற்றும் போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் தென்தமிழகத்தின் பல மாவட்டங்கள் பின்தங்கிய நிலையில் உள்ளன. போதிய வேலைவாய்ப்புகள் இல்லாததால் தென் மாவட்டங்களை சேர்ந்த குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும் சென்று வருகின்றனர். மதுரைக்கு தெற்கே கன்னியாகுமரி உள்ளிட்ட ஒருசில பகுதிகள் தவிர மற்ற மாவட்டங்களில் உள்ள ரெயில்பாதைகள் அனைத்தும் ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்டவையாகவே உள்ளன. 
இந்தநிலையில் சரக்கு போக்குவரத்து, பயணிகள் போக்குவரத்து வாயிலாக தென்மாவட்ட வளர்ச்சிக்கு வழிவகுக்கும் வகையில் தூத்துக்குடி-காரைக்குடி இடையே ராமநாதபுரம் வழியாக புதிய ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நீடித்து வந்தது. சென்னை-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை ரெயில்பாதை திட்டம் என அழைக்கப்பட்ட இந்த ரெயில்பாதை அமைக்க ஆய்வு பணி மேற்கொள்ளப்பட்டது. 
ஆய்வு
இதன்படி ஆய்வு அறிக்கை கடந்த 2012-ம் ஆண்டு ரெயில்வே அமைச்சகத்திடம் அளிக்கப்பட்டது. இதனால் புதிய ரெயில்பாதை திட்டம் நிறைவேற்றப்படும் என்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்த நிலையில் காரைக்குடி-தூத்துக்குடி இடையில் வருவாய் சாத்தியக்கூறு 8.3 சதவீதம் வருவாய் குறைவாக இருப்பதாக தெரியவந்துள்ளதாக கூறி திட்டம் கைவிடப்பட்டது. 
இந்தநிலையில் மக்களின் அவதியை போக்கும் வகையில் மத்திய அரசு காரைக்குடி-தூத்துக்குடி இடையே புதிய ரெயில்பாதை அமைக்கப்படும் என்றும் இதற்காக ரூ.41 கோடி முதல்கட்டமாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவித்துள்ளது. 
மகிழ்ச்சி
மத்திய அரசின் இந்த அறிவிப்பு தென்மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய ரெயில்பாதை அமைக்கப்பட்டால் காரைக்குடி-தூத்துக்குடி இடையே தேவகோட்டை, திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம், தேவிபட்டினம், பகுதி மக்களும், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி பகுதி மக்களும் ரெயில்போக்குவரத்து வசதி பெறுவார்கள். மேலும், கூடங்குளம், நாங்குநேரி தொழில்நுட்ப பூங்கா, ஐ.எஸ்.ஆர்.ஓ. திரவ இயக்க திட்ட மையம், தூத்துக்குடி துறைமுகம் உள்ளிட்டவைகளின் சரக்கு போக்குவரத்து இதுவரை சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு சாலை மார்க்கமாகவே நடைபெறுவதால் இந்த புதிய ரெயில்பாதையின் மூலம் ரெயில்களில் எளிதில் கொண்டு செல்ல முடியும். 
இதுபோன்ற கட்டமைப்பு வசதிகளால் தென்மாவட்டம் வளர்ச்சி பெறும் என்பதில் ஐயமில்லை. இதுபோன்ற காரணங்களை கருத்தில் கொண்டு புதிய ரெயில்பாதை திட்டத்தினை தேவையான நிதியை அடுத்தடுத்து ஒதுக்கீடு செய்து விரைந்து முழுமையாக முடிக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்