ஏலகிரிமலையில் நீர்நிலைகளில் குளிக்க தடை
ஏலகிரிமலையில் உள்ள நீர்நிலைகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜோலார்பேட்டை
ஏலகிரிமலையில் உள்ள நீர்நிலைகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரிமலை சுற்றுலா தலமாக திகழ்கிறது. அங்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையால் ஏலகிரிமலையில் உள்ள பல்வேறு குளங்கள், குட்டைகள், ஏரிகளில் தண்ணீர் நிரம்பி உள்ளது.
ஏலகிரிமலையில் உள்ள இதயதீபம் வட்டத்தில் வசிக்கும் விவசாயி ஒருவரின் 8 வயது மகன் கடந்த ஜனவரி மாதம் 28-ந்தேதி அங்குள்ள ஒரு தனியார் குளத்தில் மூழ்கி பலியானான்.
இந்தச் சம்பவம் எதிரொலியாக ஏலகிரிமலை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், சங்கர் மற்றும் போலீசார் ஏலகிரிமலையில் படகுத்துறை மற்றும் பல்வேறு குளங்கள், குட்டைகள் உள்ள பகுதியில் விளம்பர எச்சரிக்ைக பலகை வைத்துள்ளனர்.
அதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாரும் நீர்நிலைகளில் இறங்கி குளிக்கவோ, அந்தத் தண்ணீரை பயன்படுத்தவோ கூடாது, மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என தெரிவித்துள்ளனர்.