இந்தியாவில் ஆண்டுக்கு 7 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர்; பெங்களூரு மணிப்பால் மருத்துவமனை டாக்டர் தகவல்

இந்தியாவில் ஆண்டுக்கு 7 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் என்று பெங்களூரு மணிப்பால் மருத்துவமனை டாக்டர் தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-11 13:07 GMT
விழிப்புணர்வு நிகழ்ச்சி
கோலார் அரசு ஆஸ்பத்திரியில் நேற்று புற்றுநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பெங்களூரு மணிப்பால் மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவு நிபுணர் டாக்டர் அஸ்வின் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

இதய நோய்க்கு அடுத்து மிகவும் ஆபத்தானது புற்றுநோய். இதனால் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். புற்றுநோய் இருப்பதை தொடக்கத்திலேயே அறிந்துகொண்டு, அதற்குரிய சிகிச்சையை பெற்றால் அதனை குணப்படுத்த முடியும். புற்றுநோய் தீர்க்க முடியாத நோய் அல்ல. அதனை குணப்படுத்த முடியும். அதற்கான மருத்துவ தொழில்நுட்பமும் தற்போது உள்ளது. உடலில் ஏதாவது சிறிய கட்டி தென்பட்டால் தாமதிக்காமல் உடனடியாக மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை பெற வேண்டும். அலட்சியம் செய்யக்கூடாது.

12 வகையான புற்றுநோய்
நீரிழிவு, ரத்த அழுத்த நோயாளிகள் மருத்துவ பரிசோதனை செய்துகொள்வது போன்று புற்றுநோய்க்கும் மருத்துவ பரிசோதனை செய்து, நோயின் தன்மையை அறிந்து சிகிச்சை அளித்து குணப்படுத்த முடியும். பெண்களுக்கு தான் அதிகளவு புற்றுநோய் பாதிப்பு ஏற்படுகிறது. 40 வயதை கடந்த பெண்கள் தங்களின் உடல் நலனில் மிகுந்த அக்கறை செலுத்த வேண்டும். குழந்தை பெற்ற பெண்கள், தாய் பால் புகட்டாததாலும் மார்பு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பான் மசாலா, குட்கா, புகையிலை போன்ற தீய பழக்க வழக்கங்களால் அதிகளவு புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பீடி, சிகரெட் புகைப்பதால் 12 வகையான புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.

சராசரியாக 7 லட்சம் பேர் இறக்கின்றனர்
தேசிய அளவில் 4 முதல் 5 சதவீதம் இளைஞர்களுக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. கடந்த 2018-ம் ஆண்டு 25 லட்சம் பேருக்கு புற்றுநோய் பாதிப்பு இருந்தது. ஆண்டுதோறும் சராசரியாக 11 லட்சம் பேருக்கு புற்றுநோய் ஏற்படுகிறது. அத்துடன் சராசரியாக ஆண்டுக்கு 7 லட்சம் பேர் புற்றுநோயால் இறக்கின்றனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கோலார் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்