இனிப்பு கடைக்காரர் தற்கொலை வழக்கில் அ.தி.மு.க. பிரமுகருக்கு 7 ஆண்டு சிறை - பொன்னேரி கோர்ட்டு தீர்ப்பு

இனிப்பு கடைக்காரர் தற்கொலை வழக்கில் அ.தி.மு.க. பிரமுகருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பொன்னேரி கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2021-02-11 01:56 GMT
திருவொற்றியூர்,

சென்னை எண்ணூர் கே.வி. குப்பம் புதிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர் வைத்தியநாதன் (வயது 40). இவருடைய மனைவி சிவகாமி. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். வைத்தியநாதன், திருவொற்றியூர் விம்கோ நகரில் தனது தந்தைக்கு சொந்தமான இனிப்பு கடையை நடத்தி வந்தார்.

கடந்த 2013-ம் ஆண்டு வைத்தியநாதனின் தங்கையின் கணவரான திருவொற்றியூர் கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்த திருவள்ளூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. மீனவர் அணி துணைச் செயலாளரான அஞ்சப்பன் (51) என்பவர் வைத்தியநாதனை கடை நடத்த விடாமல் தொந்தரவு செய்ததுடன், அவர் பராமரிப்பில் இருந்து வந்த கடைகளையும் ஆக்கிரமித்து அதற்கான வாடகையை அவரே வசூல் செய்து வந்தார். அதனை தட்டிக்கேட்ட வைத்தியநாதனை தனது உறவினர்களுடன் வந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த வைத்தியநாதன், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தனது தற்கொலைக்கு அஞ்சப்பன்தான் காரணம் என்றும் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

இதுபற்றி வைத்தியநாதனின மனைவி சிவகாமி அளித்த புகாரின்பேரில் எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இது தொடர்பான வழக்கு பொன்னேரி கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை முடிந்து கூடுதல் அமர்வு நீதிபதி விஜயதாரணி தீர்ப்பு கூறினார். அதில், அஞ்சப்பன் குற்றவாளி என அறிவித்ததுடன், வைத்தியநாதனை தற்கொலைக்கு தூண்டியதாக அவருக்கு 7 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதையடுத்து பொன்னேரி போலீசார் அஞ்சப்பனை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்