விவசாயியை கொடுவாளால் வெட்டிய வழக்கு சி.ஆர்.பி.எப். வீரருக்கு 5 ஆண்டு சிறை
விவசாயியை கொடுவாளால் வெட்டிய வழக்கு சி.ஆர்.பி.எப். வீரருக்கு 5 ஆண்டு சிறை.
அரூர்,
தர்மபுரி மாவட்டம் அரூர் அடுத்த கூத்தாடிப்பட்டியை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 70). விவசாயி. இவரது மகன் சிவா (30). இருவரும் கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் தங்கள் நிலத்தில் தண்ணீர் பாய்ச்சியபோது முன்விரோத தகராறில் பக்கத்து நிலத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் சக்திவேல், (36) உள்ளிட்ட 7 பேர் சேர்ந்து கொடுவாள் உள்ளிட்ட ஆயுதங்களால், பொன்னுசாமி, சிவா இருவரையும் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் அரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் இருவரும் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதுகுறித்து சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் மீது கொலை முயற்சி பிரிவில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 7 பேரையும் கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு அரூர் சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கில் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. அதன்படி கொடுவாளால் வெட்டிய சி.ஆர்.பி.எப். வீரர் சக்திவேலுக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.30 ஆயிரம் அபராதம் விதித்து சார்பு நீதிபதி முகமது அன்சாரி தீர்ப்பளித்தார். மேலும், அபராத தொகையை பாதிக்கப்பட்ட பொன்னுசாமிக்கு வழங்க உத்தரவிட்டார். மற்ற 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் முத்துராஜா ஆஜராகி வாதாடினார்.