மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரவேண்டும்; விசுவ ஹிந்து பரிஷத் மாநில பொதுக்குழுவில் தீர்மானம்

மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரவேண்டும் என்று விசுவ ஹிந்து பரிஷத் மாநில பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2021-02-10 21:13 GMT

ஸ்ரீரங்கம், பிப்.11-
தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. கூட்டத்தை முன்னாள் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். மாநில இணை பொது செயலாளர் ராமசுப்பு வரவேற்றார். கூட்டத்தில் சிறுபான்மை மாணவர்களுக்கு கிடைக்கும் அரசின் எல்லா உதவிகளும் அனைத்து மாணவர்களுக்கும் கிடைக்க ஆவண செய்ய வேண்டும். இந்துக்களின் வறுமையை பயன்படுத்தி மதமாற்றம் செய்வதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் மதமாற்ற தடை சட்டம் கொண்டு வரவேண்டும்.
கோவில்களையும் அவற்றின் சொத்துக்களையும் முறையாக பராமரித்து, நிர்வாகம் செய்யவும்,  இந்து அறநிலையத்துறையை கலைத்துவிட்டு இந்து சமய ஆச்சாரியர்கள், மடாதிபதிகள், ஆன்மிக தலைவர்கள், பண்பாட்டு ஆர்வலர்கள் அடங்கிய சுய அதிகாரம் கொண்ட ஒரு ஆட்சி மன்றத்தை அமைக்க வேண்டும். தமிழக அரசு உடனடியாக எல்லா டாஸ்மாக் கடைகளையும் மூடி தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தீர்மானங்களை முன்மொழிந்து தமிழ்நாடு விசுவ ஹிந்து பரிஷத் மாநில தலைவர் கோபால்ஜி பேசினார். கூட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்