பொத்தமேட்டுப்பட்டியில் ஜல்லிக்கட்டு; காளைகள் முட்டியதில் 22 பேர் காயம்
மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டியதில் 22 பேர் காயமடைந்தனர்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த பொத்தமேட்டுப்பட்டியில் உள்ள புனித வியாகுல மாதா ஆலய திடலில் நேற்று காலை ஜல்லிக்கட்டு கோலாகலமாக நடைபெற்றது. ஊர் வழக்கப்படி ஊர் முக்கியஸ்தர்கள் புனித நீர் எடுத்து வந்த பின்னர் ஜல்லிக்கட்டை மணப்பாறை தாசில்தார் லெஜபதிராஜ், துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.
முதலில் செவலூர் சின்னாக்கவுண்டர் காளை அவிழ்த்து விடப்பட்டது. அதைத்தொடர்ந்து கோவில்காளையும் மற்ற காளைகளையும் தொடர்ந்து அவிழ்த்து விடப்பட்டன. திருச்சி, திண்டுக்கல், மதுரை, புதுக்கோட்டை, கரூர் என பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஜல்லிக்கட்டு காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
தூக்கி வீசிய காளைகள்; துணிந்து பிடித்த வீரர்கள்
வாடிவாசலில் இருந்து அவிழ்த்து விடப்பட்ட காளைகள் களத்தில் தன்னை அடக்க வந்த வீரர்களிடம் ஆக்ரோசம் காட்டி தூக்கி வீசியது. இருப்பினும் தூக்கி வீசிய காளைகளை வீரர்கள் துணிவுடன் சென்று அடக்கி அசத்தினர்.
இதில் வெற்றி பெற்ற காளையின் உரிமையாளர்களுக்கும், காளைகளை அடக்கிய வீரர்களுக்கும் கட்டில், சைக்கிள், தங்க, வெள்ளி நாணயங்கள், ரொக்கப்பணம் மற்றும் பாத்திரங்கள் என்று பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன.
இந்த ஜல்லிக்கட்டியில் 715 காளைகள் மற்றும் 313 வீரர்கள் பங்கேற்றனர். காளைகள் முட்டியதில் 22 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்களுக்கு அதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது.
4 பேர் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டை காண பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, ஆர்.சந்திரசேகர் எம்.எல்.ஏ., அ.தி.மு.க. திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
வர்ணனை செய்த போலீஸ் இன்ஸ்பெக்டர்
நேற்றைய ஜல்லிக்கட்டு போட்டியில் மணப்பாறை போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் காலை முதலே பாதுகாப்பு பணியில் தீவிரம் காட்டினார். இந்நிலையில் மேடையில் இருந்த அவர் ஜல்லிக்கட்டை மிகவும் நேர்த்தியாக வர்ணனை செய்தார். பிடி மாடு எது?, வெற்றி பெற்ற மாடு எது? என்பதை விதிமுறைகளின் படி முறையாக தொடர்ந்து அறிவிப்பு செய்து கொண்டே இருந்தார். இதுமட்டுமின்றி விதிமுறைகளை மீறிய வீரர்களையும் கண்காணித்து அதிரடியாக வெளியேற்றினார். இதே போல் விதிமுறைகளை மீறிய மாடுகளின் உரிமையாளர்களையும் கடுமையாக கண்டித்தார். ஜல்லிக்கட்டு களத்தில் சுமார் 8 மணி நேரம் இடைவிடாமல் பணியாற்றி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதுமட்டுமின்றி முதல் மூன்று பரிசுகளை வென்ற காளை மற்றும் காளையர்களையும் அவரே அறிவித்து அசத்தி அனைவரின் கரகோசத்தையும் பெற்றார்.
சிறந்த வீரருக்கு காளை பரிசு
இந்த ஜல்லிக்கட்டில் கலந்து கொண்ட மயிலாப்பூரைச்சேர்ந்த ஜஸ்டின் என்பவர் இறுதி சுற்று வரை களத்தில் நின்று மொத்தம் 18 காளைகளை அடக்கி முதல் பரிசை பெற்றார். அவருக்கு தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு சார்பில் ஜல்லிக்கட்டு காளை பரிசாக வழங்கப்பட்டது. இதே போல் காளைகளுக்கு முதல் பரிசாக துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா பேரில் அவிழ்க்கப்பட்ட காளைக்கு வழங்கப்பட்டது.