திருச்சி கிழக்கு தொகுதி யாருக்கு? தே.மு.தி.க.வினர் ஒட்டியுள்ள சுவரொட்டியால் பரபரப்பு

திருச்சி கிழக்கு தொகுதி யாருக்கு? என முடிவாகாத நிலையில் தே.மு.தி.க.வினர் ஒட்டியுள்ள சுவரொட்டியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-02-10 20:47 GMT
திருச்சி,

தமிழக சட்டமன்றத்துக்கு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் தேர்தல் நடக்கிறது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில் அரசியல் கட்சிகளின் கூட்டணி நிலைப்பாடு மற்றும் தொகுதி பங்கீடு குறித்து இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடந்த தேர்தலில் கூட்டணி அமைத்த கட்சிகளே மீண்டும் இந்த தேர்தலிலும் கூட்டணி அமைக்கும் என்று பரவலாக பேசப்பட்டு வந்தாலும், எந்த கட்சியிடம் இருந்தும் இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்தநிலையில் தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் நடந்த தென்சென்னை மாவட்ட தே.மு.தி.க. ஆலோசனை கூட்டத்தில் பேசும்போது, தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவது தே.மு.தி.க.வுக்கு பெரிய விஷயமல்ல. கூட்டணி தர்மத்துக்காக பொறுமையாக காத்திருக்கிறோம். இந்த பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. இந்த தேர்தலில் தே.மு.தி.க. இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது என்று பேசினார். அவருடைய இத்தகைய பேச்சு அ.தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியது.

திருச்சி கிழக்கு தொகுதி 

அதேநேரம் அ.தி.மு.க. கூட்டணியில் தான் இன்றளவும் தே.மு.தி.க. இடம்பெற்றுள்ளதாக கூறினாலும், கூட்டணிக்கு தலைமை பொறுப்பில் உள்ள அ.தி.மு.க. வரும் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தையை தொடங்காமல் தாமதப்படுத்துவது தே.மு.தி.க.வினர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது ஒருபுறம் இருந்தாலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள சில முக்கிய தொகுதிகள் எந்த கட்சிக்கு ஒதுக்கப்படும் என்பதும் தெரியாததால் அந்தந்த தொகுதிகளில் தேர்தல் பணிகள் சுறுசுறுப்படையாமல் மந்தமாகவே உள்ளது. 

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளில் குறிப்பாக திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி யாருக்கு ஒதுக்கப்படும் என்பது அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்குமே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. தற்போது திருச்சி கிழக்கு தொகுதி அ.தி.மு.க. கைவசம் உள்ளது. அந்த தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் வெல்லமண்டிநடராஜன் தற்போது கட்சியில் மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். வரும் தேர்தலில் இந்த தொகுதியில் வேட்பாளராக நிற்க அ.தி.மு.க.வின் முன்னணி நிர்வாகிகளிடையே பலத்த போட்டி நிலவி வருகிறது.

சுவரொட்டியால் பரபரப்பு 

ஆனாலும் அதன் கூட்டணி கட்சிகளான தே.மு.தி.க., பா.ஜ.க. போன்ற கட்சியினரும் கிழக்கு தொகுதியை குறிவைத்து காய் நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கு அச்சாரமிடும் வகையில், தே.மு.தி.க. திருச்சி மாவட்ட செயலாளர் டி.வி.கணேசுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி மாநகரில் பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டியில், ‘எங்கள் வருங்கால கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரே' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

திருச்சி-தஞ்சை சாலையில் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ள இந்த சுவரொட்டி அ.தி.மு.க.வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அ.தி.மு.க. கூட்டணியில் கிழக்கு தொகுதி எந்த கட்சிக்கு ஒதுக்கப்படும்? என இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், தே.மு.தி.க. நிர்வாகி ஒருவர் தே.மு.தி.க. மாவட்ட செயலாளரை வருங்கால கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ. என அச்சடித்து ஒட்டியுள்ள சுவரொட்டி திருச்சி மாவட்ட அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்