மதுரை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 4,037 ஆக உயர்வு
மதுரை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 4,037 ஆக உயர்வு
மதுரை, பிப்.
மதுரை மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்து 37 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்று கலெக்டர் அன்பழகன் கூறினார்.
ஆலோசனை
தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை தேர்தல் ஆணையம் முடுக்கி விட்டுள்ளது. கடந்த மாதம் 20-ந்தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கொரோனா காரணமாக வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் பணி நடந்து வருகிறது. கடந்த காலங்களில் ஒரு வாக்குச்சாவடிக்கு 1,500 பேர் வீதம் வாக்களித்தனர். இந்த எண்ணிக்கை ஆயிரமாக குறைக்கப்பட்டு உள்ளது. எனவே மதுரை மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
இது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் கலெக்டர் அன்பழகன் ஆலோசனை நடத்தினார்.
அப்போது அரசியல் கட்சியினர் பேசும் போது, வாக்குச்சாவடி எண்ணிக்கையை அதிகரிக்கும் போது அதே மையத்தில் வாக்குச்சாவடியை ஏற்படுத்த வேண்டும். 80 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தபால் ஓட்டு வழங்குவது குறித்து தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிமுறைகளை தெரிவிக்க வேண்டும். பூத் சிலிப்பை வீடு வீடாக சென்று வழங்க வேண்டும் என்றனர்.
தபால் ஓட்டு
அதற்கு பதிலளித்து கலெக்டர் அன்பழகன் பேசியதாவது:-
மதுரை மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. மதுரையில் இதற்கு முன்பு 2 ஆயிரத்து 716 வாக்குச்சாவடிகள் இருந்தன. புதிதாக 1,321 வாக்குச்சாவடிகள் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி மொத்தம் 4 ஆயிரத்து 37 வாக்குச்சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
80 வயதிற்கு மேற்பட்டவர்கள் எந்த முறையில் தபால் ஓட்டு அளிக்கலாம் என்ற விவரம் இன்னும் வெளியிடப்பட வில்லை. அந்த தகவல் கிடைத்தவுடன் தெரிவிக்கப்படும். இங்கு நீங்கள் தெரிவிக்கும் கருத்துகள் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கப்படும்.
சித்திரை திருவிழா
மதுரை மாவட்டத்தில் சித்திரை திருவிழா ஏப்ரல் மாதம் 16-ந் தேதி முதல் 30-ந் தேதி வரை நடக்கிறது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.