மதுரை ஆரப்பாளையம் வைகை ஆற்றுப்பகுதியில் தடுப்பணை -அமைச்சர் செல்லூர் ராஜூ

நகரின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஆரப்பாளையம் வைகை ஆற்றுப்பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட உள்ளது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

Update: 2021-02-10 19:20 GMT
மதுரை, 

மதுரை மாநகராட்சி வெள்ளி வீதியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 2 ஆயிரத்து 200 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி கமிஷனர் விசாகன் தலைமை தாங்கினார். அமைச்சர் செல்லூர் ராஜூ விலையில்லா சைக்கிள்களை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது.

அரசு பள்ளி மாணவர்கள் சிறப்பாக கல்வியை கற்க வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித்துறைக்கு பட்ஜெட்டில் 5-ல் ஒரு மடங்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கூட 34 ஆயிரம் கோடியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி உள்ளார். இந்த தொகை மூலமாக பள்ளிகளை சீரமைப்பது, கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது, மாணவர்களுக்கு வேண்டிய மடிக்கணினிகள் உட்பட 16 வகையான உபகரணங்கள் வழங்குவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மாணவர்களின் இந்த பருவம் என்பது ஒரு அளப்பரிய, முக்கியமான பருவம் ஆகும். எனவே ஆசிரியர்கள், பெரியவர்கள் சொல்லுகின்ற கருத்துக்களை கேட்டு கவனமாக கல்வியை கற்றால் உயர்ந்த இடத்திற்கு வரலாம். இந்த மதுரை மண்ணிலே பிறந்த சுந்தர் பிச்சை கூகுள் நிறுவனத்தின் உயர் அதிகாரியாக இருக்கிறார். அதுமட்டுமல்ல மாநகராட்சி பள்ளிகளில் படித்த ஏராளமானோர் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளாகவும், மருத்துவர்களாகவும் உள்ளார்கள்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கபப்ட்டுள்ளது. இதன் மூலம் இந்த ஆண்டு 438 மாணவர்கள் மருத்துவபடிப்பில் சேர்ந்து உள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அனைத்து வகையான வசதிகளும், சிறப்பு பயிற்சிகளும் மாநகராட்சி பள்ளியில் வழங்கப்பட்டு வருகிறது.

மதுரையில் பல்வேறு வளர்ச்சித்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது. நிறைய தொழிற்சாலைகள் வர இருக்கின்றது. நிறைய வேலைவாய்ப்புகள் உருவாக இருக்கிறது. ரூ.1,295 கோடி மதிப்பீட்டில் முல்லை பெரியாறில் இருந்து குடிநீர் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் மூலம் 24 மணி நேரமும் குடிநீர் தட்டுப்பாடு இன்றி கிடைக்கும். நகரின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த ஆரப்பாளையம் வைகை ஆற்றுப்பகுதியில் தடுப்பணை கட்டப்பட உள்ளது. மதுரையில் வளர்ச்சிப்பணிகள் நடப்பதால் போக்குவரத்து சிரமமாக உள்ளது. விரைவில் அனைத்தும் சரிசெய்யப்படும். எதிர்காலத்தில் சிறந்த மாநகராக மதுரை விளங்கும். இவ்வாறு அவர் பேசினார். 

மேலும் செய்திகள்