அரசு ஊழியர்கள் 80 பேர் கைது
மதுரையில் அரசு ஊழியர்கள் 80 பேரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை,
அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2-ந்தேதி முதல் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. மதுரையில் 9-வது நாளாக நேற்று அரசு ஊழியர் சங்க தலைவர் மூர்த்தி, செயலாளர் நீதிராஜா ஆகியோர் தலைமையில் கலெக்டர் அலுவலகம் செல்லும் சாலை திருவள்ளூர் சிலை அருகே அரசு ஊழியர்கள் திரண்டனர். அவர்கள் திடீரென்று அந்த சாலையில் அமர்ந்து ஒப்பாரி வைத்து மறியல் போராட்டம் செய்தனர். அப்போது போலீசார் அவர்களை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பெண் ஊழியர்கள் உள்ளிட்ட 80 பேரை போலீசார் கைது செய்தனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.