டெல்லிக்கு அனுப்ப வேண்டிய பல கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.
டெல்லிக்கு அனுப்ப வேண்டிய பல கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.
திருப்பூர்:-
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் டெல்லிக்கு அனுப்ப வேண்டிய பல கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை சரக்குகள் தேக்கமடைந்துள்ளன.
பின்னலாடை சரக்குகள்
டாலர் சிட்டி என்றழைக்கப்படும் திருப்பூரில் இருந்து தினமும் வெளிநாடுகள், வெளிமாநிலம், வெளிமாவட்டம் என பல்வேறு பகுதிகளுக்கு பின்னலாடைகள் அனுப்பிவைக்கப்படுகிறது. திருப்பூரை பொறுத்தவரை இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள மொத்த வியாபாரிகள் கொடுக்கிற ஆர்டர்களின்படி ஆடைகளை உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர்கள் அனுப்புகிறார்கள்.
இந்த ஆடைகள் அனைத்தும் புக்கிங் அலுவலகம் மூலம் லாரிகளில் பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பிவைக்கப்படுகிறது. இதனால் திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான புக்கிங் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதுபோல் ஏற்றுமதி செய்யப்படும் ஆடைகளும் லாரிகள் மூலம் சென்னை, தூத்துக்குடி உள்ளிட்ட துறைமுகங்களுக்கும் அனுப்பிவைக்கப்படுகிறது.
விவசாயிகள் போராட்டம்
இதனால் இந்த லாரி புக்கிங் அலுவலகங்கள் எப்போதும் பரபரப்பாகவே இருக்கும். தற்போது டெல்லியில் விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே இந்த போராட்டத்தின் போது வன்முறை சம்பவங்களும் கடந்த வாரம் நடைபெற்றன.
இதனால் டெல்லிக்கு அனுப்ப வேண்டிய பின்னலாடை சரக்குகள் அனைத்தும் தேக்கமடைந்துள்ளன. இதன் காரணமாக உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
தேக்கம்
இது குறித்து லாரி புக்கிங் அலுவலக உரிமையாளர்கள் கூறியதாவது:-
திருப்பூரில் இருந்து தினமும் பல மாநிலங்களுக்கு பின்னலாடை சரக்குகள் அனுப்பிவைக்கப்படுகின்றன. இதற்காக லாரிகளில் புக்கிங் செய்ய பலர் வருவார்கள். இதிலும் குறிப்பாக டெல்லி மற்றும் வடமாநிலங்களுக்கு அதிகளவு பின்னலாடைகள் அனுப்பிவைக்கப்படும். ஆனால் தற்போது டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக குறைந்த அளவு லாரிகளே டெல்லிக்கு சென்று வந்தன. மேலும், வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதால் லாரிகளில் சரக்குகளை அனுப்புவதற்கு பலரும் பயப்படுகிறார்கள். சரக்குகள் சரியாக சென்றடையுமா? என்ற அச்சம் இருப்பதால், டெல்லிக்கு குறைந்த அளவு தான் சரக்குகளை அனுப்புகிறார்கள். இதிலும் லாரிகளின் எண்ணிக்கை தற்போது குறைவாகவே டெல்லிக்கு ஓடுகிறது.
இதன் காரணமாக டெல்லிக்கு அனுப்புவதற்கு பலரும் புக்கிங்செய்து வைத்துள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான பின்னலாடை சரக்குகள் பல அலுவலகங்களில் தேக்கமடைந்துள்ளன. விவசாயிகள் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னர் தான் இந்த சரக்குகள் வழக்கம் போல் செல்லும். சரக்குகள் தேக்கமடைந்துள்ளதால் உள்நாட்டு ஆடை தயாரிப்பாளர்கள் கவலையடைந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.