தூத்துக்குடியில் சிறந்த தொடக்கப்பள்ளிகளுக்கு சுழற்கேடயம் பரிசு கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த தொடக்கப்பள்ளிகளுக்கு சுழற்கேடயம் பரிசை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த தொடக்கப்பள்ளிகளுக்கு சுழற்கேடயம் பரிசை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வழங்கினார்.
சிறந்த பள்ளிகளுக்கு பரிசு
தூத்துக்குடி மாவட்ட தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் சிறப்பாக செயல்படும் பள்ளிக்கூடங்கள் ஆண்டுதோறும் தேர்வு செய்யப்பட்டு சுழற்கேடயங்கள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன்படி கடந்த 2018-19-ம் கல்வி ஆண்டில் தூத்துக்குடி மாவட்டத்தில் சிறந்த பள்ளிகளாக வடக்கூர் எஸ்.ஏ.வி. தொடக்கப்பள்ளி, குமாரகிரி, புறையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகள் ஆகியவை தேர்வு செய்யப்பட்டு உள்ளன. இந்த பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு சுழற்கேடயம் பரிசு வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமை தாங்கி, சுழற்கேடயங்களை வழங்கி பாராட்டினார். தொடர்ந்து பல்வேறு துறைகள் மூலம் 196 பயனாளிகளுக்கு ரூ.10 லட்சத்து 21 ஆயிரத்து 139 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.
கலந்து கொண்டவர்கள்
நிகழ்ச்சியில் தூத்துக்குடி உதவி கலெக்டர் சிம்ரான்ஜீத்சிங் கலோன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தனபதி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அமுதா, மாற்றுத்திறனாளி நல அலுவலர் பிரமநாயகம், மகளிர் திட்டம் திட்ட இயக்குநர் ரேவதி, பிற்படுத்தபட்டோர் நல அலுவலர் ஜீவரேகா, வட்டார கல்வி அலுவலர் ஜெயபாலன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.