உதவித்தொகையை உயர்த்த கோரி கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம்

உதவித்தொகையை உயர்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குடியேறும் போராட்டம் நடத்தினர்.

Update: 2021-02-09 22:53 GMT
கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுதிறனாளிகள் குடியேறும்போராட்டம் நடத்தியபோது எடுத்த படம்.
குடியேறும் போராட்டம்
தெலுங்கானா, புதுச்சேரியில் வழங்குவது போல், மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகையை ரூ.3 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் நேற்று மாற்றுத்திறனாளிகள் அரசு அலுவலகம் முன்பு குடியேறும் போராட்டம் அறிவித்து இருந்தனர்.

ஒன்றிய அலுவலகத்தில் குடியேறினர்
இதன்படி, கறம்பக்குடி ஒன்றிய தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பில், கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் குடியேறும் போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக மாற்றுத்திறனாளிகள் சங்க ஒன்றிய அமைப்பாளர் மாலதி, லெனின் ஆகியோர் தலைமையில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் ஊர்வலமாக புறப்பட்டு கறம்பக்குடி ஒன்றிய அலுவலகத்திற்கு வந்தனர். ஒன்றிய அலுவலக நுழைவு வாயிலில் போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். 

பின்னர் கறம்பக்குடி தாசில்தார் விசுவநாதன், ஆலங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துராஜா, கறம்பக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இருப்பினும் கோரிக்கைகள் நிறைவேறும்வரை ஒன்றிய அலுவலகத்தில் குடியேறி காத்திருக்க போவதாக கூறிய மாற்றுத்திறனாளிகள், ஒன்றிய அலுவலக வளாகத்திற்குள் சென்று அமர்ந்து குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர். வெட்டவெளியில் சுட்டெரிக்கும் வெயிலில் மாற்றுத்திறனாளிகள் போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொருளாளர் கிரிஜா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கணேஷ், ராமகிருஷ்ணன், சண்முகராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அன்னவாசல்
இலுப்பூர் வட்டாட்சியர் அலுவலக நுழைவுவாயிலில் தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் லெனின் முன்னிலை வகித்தார். இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்துகொண்டு கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். 

அறந்தாங்கி
அறந்தாங்கி கோட்டாட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை வகித்தார். போராட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

மேலும் செய்திகள்