தஞ்சையில் இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 26 ஆயிரம் சதுரஅடி காலிமனை அரசுடைமை

தஞ்சையில் சசிகலா உறவினர்களான இளவரசி, சுதாகரனுக்கு சொந்தமான 26 ஆயிரம் சதுரஅடி காலிமனை அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

Update: 2021-02-09 22:49 GMT
சசிகலாவின் உறவினர்கள் 
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, அவருடைய தோழி சசிகலா உள்ளிட்டோருக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதில் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. இதனால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறை தண்டனை உறுதியானது. சிறை தண்டனை முடிந்து சசிகலா, இளவரசி ஆகியோர் விடுதலையாகினர். சுதாகரன் இதுவரை விடுதலையாகவில்லை. இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இளவரசி, சுதாகரனின் சொத்துகளை தமிழக அரசு அரசுடைமையாக்கியது.

26 ஆயிரம் சதுரஅடி காலிமனை 
இதைத்தொடர்ந்து, தஞ்சை வ.உ.சி. நகர் முதல் தெருவில் பிளாக் எண் 75-ல் உள்ள 26,540 சதுர அடி பரப்பளவு கொண்ட காலிமனைகளை அரசுடைமையாக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ்  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- 
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி, தஞ்சை வ.உ.சி. நகரில் சுதாகரன், இளவரசி பெயரில் உள்ள சொத்துகளை பறிமுதல் செய்து தமிழ்நாடு அரசின் சொத்து என பெயர் மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதனால், இந்த சொத்துகள் அனைத்தும் தமிழ்நாடு அரசின் சொத்துகள் என தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த சொத்துகளிலிருந்து பெறப்படும் வருவாய் அனைத்தும் தமிழ்நாடு அரசுக்கு பாத்தியப்பட்டது என தெரிவித்துள்ளார்.
தஞ்சை வ.உ.சி. நகரில் உள்ள இந்த காலிமனையை 1995-ம் ஆண்டு ரூ.11 லட்சத்துக்கு வாங்கி உள்ளனர். தற்போது இதன் மதிப்பு ரூ.10 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.

மேலும் செய்திகள்