அறந்தாங்கி அருகே, இறந்த மாமியார் உடலை வீட்டிற்குள் வைக்க மறுத்த மருமகள் - பக்கத்து வீட்டில் வைத்து இறுதி சடங்கு நடந்தது

அறந்தாங்கி அருகே இறந்த மாமியார் உடலை வீட்டிற்குள் வைக்க மருமகள் மறுத்ததால் பக்கத்து வீட்டில் இறுதி சடங்கு நடத்தப்பட்டது.

Update: 2021-02-09 22:42 GMT
ஆவணத்தாங்கோட்டையில் இளஞ்செழியன் வீட்டின் அருகே மீனாம்பாளுக்கு சடங்கு முறை செய்யப்பட்ட போது எடுத்த படம்.
அறந்தாங்கி,

புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே ஆவணத்தாங்கோட்டையை சேர்ந்தவர் மீனாம்பாள் (வயது 65). இவரது கணவர் நடேசன் ஏற்கனவே இறந்து விட்டார். இவர்களின் மகன் முருகன் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ஒரு விபத்தில் இறந்து விட்டார். 
இந்நிலையில் மீனாம்பாளின் வீட்டில் மருமகள் லதா மட்டும் வசித்து வந்த நிலையில் மாமியாருக்கும், மருமகள் லதாவுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதையடுத்து வீட்டின் தாழ்வாரத்தில் மீனாம்பாள் தனியாக சமைத்து சாப்பிட்டு வந்தார்.

மீனாம்பாளுக்கு 3 மகள்கள் இருந்த நிலையில், அறந்தாங்கியில் வசித்து வரும் இளைய மகள் விமலாவின் வீட்டிற்கு சென்றிருந்த நேரத்தில் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் மீனாம்பாள் அங்கேயே இறந்து விட்டார். இதையடுத்து அவரது உறவினர்கள் மீனாம்பாளின் உடலை  ஆவணத்தாங்கோட்டையில் உள்ள அவரது சொந்த வீட்டிற்கு எடுத்து வந்தனர். 

வீட்டிற்கு கொண்டு வந்தபோது, உடலை வீட்டிற்குள் அனுமதிக்க மறுத்த மருமகள் லதா உறவினர்களுடன் தகராறு செய்தார். வீட்டிற்குள் உடலை வைத்தால் நடப்பதே வேறு என்றும், மீறி வைத்தால் தற்கொலை செய்து கொள்வேன் என்றும் மிரட்டியுள்ளார். 

இதனைத்தொடர்ந்து செய்வதறியாது குழப்பத்தில் இருந்த உறவினர்களின் நிலையை பார்த்த பக்கத்து வீட்டுக்காரரும், உறவினருமான இளஞ்செழியன் குடும்பத்தினர் மீனாம்பாளின் உடலை அவரது வீட்டில் வைக்க சம்மதித்து அனைத்து சடங்குகளையும், தாங்களே ெசாந்த செலவில் செய்து கொள்வதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து மீனாம்பாளின் உடலை இளஞ்செழியன் வீட்டில் வைத்தனர். 
துக்கத்திற்கு வந்தவர்கள் அனைவரும் இளஞ்செழியன் வீட்டிற்கு வந்து துக்கம் விசாரித்து விட்டு சென்றனர். 
பின்னர் மீனாம்பாளின் உடலை எடுத்து சென்று இளஞ்செழியன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தகனம் செய்தனர். 

இளஞ்செழியன் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார். மீனாம்பாள் இறந்த சம்பவம் பற்றி அவரிடம், அவரது மனைவி சகிகலா செல்போனில் தகவல் கூறினார். இதையடுத்து தனது வீட்டில் வைத்து அவரது இறுதி சடங்கு நடத்துங்கள் என்று அவரது குடும்பத்தினரிடம் கூறியுள்ளார். அதன்பேரில் ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்யப்பட்டு மீனாம்பாளின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

எதையும் எதிர்பார்க்காமல் உதவி செய்த இளஞ்செழியன் மற்றும் அவரது குடும்பத்தினரை கிராம மக்கள், உறவினர்கள் பாராட்டினர்.

மேலும் செய்திகள்