சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி

சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-02-09 21:23 GMT
சேலம்:
சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு தனியார் நிறுவன ஊழியர் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தீக்குளிக்க முயற்சி
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள புங்கவாடி பகுதியை சேர்ந்தவர் கலைச்செல்வன் (வயது 35). இவருடைய மனைவி ராஜேஸ்வரி (31). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்த நிலையில் நேற்று காலை கலைச்செல்வன் தனது மனைவி மற்றும் மகன்களுடன் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு வந்தார். பின்னர் அவர், தான் பாட்டிலில் கொண்டு வந்த மண்எண்ணையை எடுத்து தன் மீதும் மனைவி மற்றும் மகன்கள் மீதும் ஊற்றினார். இதையடுத்து அவர் தீக்குச்சியை எடுத்து பற்ற வைக்க முயன்றார். அப்போது இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் வேகமாக ஓடி வந்து அவர்களை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தினர்.
கணவர் பணிநீக்கம்
இதையடுத்து கலைச்செல்வன், ராஜேஸ்வரி மற்றும் 2 மகன்களை போலீசார் சேலம் டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர். 
 போலீசாரிடம் ராஜேஸ்வரி கூறும்போது, எனது கணவர் கலைச்செல்வன் பெரமனூர் பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். அங்கு பணிபுரியும் மேலாளர்கள் எனது கணவரை பணிநீக்கம் செய்யும் நோக்கத்தில் அவரை அழைத்து தாக்கியதுடன் தகாத வார்த்தையில் பேசினர். மேலும் அவருக்கு கொலை மிரட்டல் விடுத்து ஒரு கடிதத்தில் கையெழுத்து வாங்கி கொண்டனர். இதனால் மனவேதனையில் இருந்த நாங்கள் தீக்குளித்து தற்கொலை செய்யும் நோக்கத்தில் இங்கு வந்தோம்.
எனது கணவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கலெக்டர் அலுவலகம் முன்பு தனியார் நிறுவன ஊழியர் தனது மனைவி மற்றும் மகன்களுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்