டாஸ்மாக் மேற்பார்வையாளிடம் ரூ.5.14 லட்சம் திருடிய வாலிபர் கைது
மானூர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் ரூ.5.14 லட்சம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
மானூர்:
மானூர் அருகே டாஸ்மாக் மேற்பார்வையாளரிடம் ரூ.5.14 லட்சம் திருடிய வாலிபரை கைது செய்தனர்.
டாஸ்மாக் மேற்பார்வையாளர்
மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தை சேர்ந்தவர் ரவி (வயது 49). இவர் அங்குள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வருகிறார். அவர் கடந்த 6, 7-ந் தேதிகளில் கடையில் மது விற்ற தொகையான ரூ.5 லட்சத்து 14 ஆயிரத்து 620-ஐ மானூரில் உள்ள வங்கியில் செலுத்துவதற்காக தனது மோட்டார்சைக்கிளில் நேற்று முன்தினம் புறப்பட்டார். அப்போது பணத்தை அவர் மோட்டார் ைசக்கிளில் உள்ள பெட்டிக்குள் வைத்து இருந்தார்.
அவருக்கு சொந்தமான தோட்டம் பிள்ளையார்குளம் விலக்கு பகுதியில் உள்ளது. வங்கிக்கு செல்லும் வழியில் தோட்டத்தில் வேலைக்காக தனது மனைவி பிரியதர்ஷினியை கொண்டு விடுவதற்காக அவரையும் தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். தெற்கு வாகைகுளம் விலக்கு பகுதியில் சென்றபோது, அவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்த துரைசாமி மகன் லட்சுமணன் (35) என்பவர் தனது கார் பழுதானதாக கூறி அங்கு நின்றார். இதை பார்த்த ரவியும், அவரது மனைவி பிரியதர்ஷினியும் லட்சுமணனுக்கு உதவி செய்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.
பணம் திருட்டு
பின்னர் ரவி தனது மனைவியை தோட்டத்தில் இறக்கி விட்டு, மோட்டார் சைக்கிளில் பெட்டியில் இருந்த பணத்தை பார்த்தார். அப்போது பணம் திருட்டு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதனால் நண்பர்களிடம் பணத்தை கடனாக பெற்று வங்கியில் செலுத்தினார். இதற்காக லட்சுமணனிடமும் ரூ.3 லட்சத்தை கடனாக பெற்றார்.
பின்னர் இதுகுறித்த புகாரின்பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வந்தனர்.
நேற்று அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, லட்சுமணன் காரில் வந்தார். அவரது காைர நிறுத்திய போலீசார், சந்தேகத்தின் பேரில் நடத்திய விசாரணையில், ரவியும், அவரது மனைவியும் தனது பழுதான காரை சரிசெய்ய உதவி செய்தபோது அவர்களுக்கு தெரியாமல் பணத்தை திருடியதை லட்சுமணன் ஒப்புக் கொண்டார்.
வாலிபர் கைது
மேலும் அவர் தனக்கு ரூ.2 லட்சம் கடன் இருப்பதாகவும், அதை திருப்பி செலுத்த முடியாததால் திட்டமிட்டு ரவியிடம் பணத்தை திருடியதாகவும் தெரிவித்தார். மேலும் அந்த பணத்தில் இருந்து அவர் ரவிக்கு ரூ.3 லட்சம் கடனாக கொடுத்ததும் அம்பலமானது. இதையடுத்து லட்சுமணனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் ரெட்டியார்பட்டியில் உள்ள தனது முதல் மனைவியின் வீட்டில் வைத்திருந்த திருட்டு பணம் ரூ.5 லட்சத்து 14 ஆயிரத்து 620-ஐ போலீசார் மீட்டனர்.