கூட்டுறவுத்துறை அலுவலகத்தை பொது வினியோக ஊழியர்கள் முற்றுகை
பாளையங்கோட்டையில் கூட்டுறவுத்துறை அலுவலகத்தை பொது வினியோக ஊழியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
நெல்லை:
பாளையங்கோட்டையில் கூட்டுறவுத்துறை அலுவலகத்தில் பொது வினியோக ஊழியர் சங்கத்தினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
ஊர்வலம்
தமிழ்நாடு பொது வினியோக ஊழியர் சங்கம் சார்பில் நேற்று பாளையங்கோட்டையில் உள்ள கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தினர்.
இதற்காக மாநில தலைவர் பால்ராஜ் தலைமையில், மேலவாசல் முருகன் கோவில் அருகில் நிர்வாகிகள், ஊழியர்கள் திரண்டனர். அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக இணைப்பதிவாளர் அலுவலகம் நோக்கி வந்தனர். அலுவலக நுழைவு வாசலுக்கு சில அடி தூரத்துக்கு முன்பு அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது போராட்டம் நடத்த அனுமதியில்லை, எனவே நிர்வாகிகள் மட்டும் உள்ளே சென்று கோரிக்கை மனு கொடுக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கும், போராட்ட குழுவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
முற்றுகை போராட்டம்
பின்னர் அங்கு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தினர். இதில், ரேஷன் கடை பணியாளர்கள் மீது பொய் வழக்குகள் போடும் நெல்லை மாவட்ட உணவு கடத்தல் தடுப்பு போலீஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்ய வேண்டும். இதனால் பாதிக்கப்பட்ட ஊழியர்களை உடனடியாக பணியில் அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசினர். இதில் மாநில பொதுச் செயலாளர் குமரி செல்வன், பொருளாளர் மனோகரன், பிரதிநிதி கவுரி சங்கர், நெல்லை மாவட்ட தலைவர் இளங்கோ, செயலாளர் ராஜமாணிக்கம், பொருளாளர் சீனிவாசலு உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
முற்றுகை போராட்டத்தின் போது மாநில தலைவர் பால்ராஜ், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசிக் கொண்டிருந்தார். அப்போது போலீஸ் அதிகாரி ஒருவரின் ஜீப் போராட்டம் நடந்த பகுதியில் கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. அதில் பொருத்தப்பட்டிருந்த ஒலிபெருக்கிக்கான மைக் எடுத்து கொடுக்கப்பட்டது. அந்த மைக்கில், போலீசாரை கண்டித்தும், கூட்டுறவுத்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவுத்துறை அதிகாரிகளை கண்டித்தும் பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது.