பயிர்கடன் தள்ளுபடிக்காக கடலூர் மாவட்டத்திற்கு 592 கோடி ரூபாய் ஒதுக்கீடு

பயிர்கடன் தள்ளுபடிக்காக கடலூர் மாவட்டத்திற்கு 592 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-02-09 19:53 GMT
கடலூா்:

கடந்த சில நாட்களுக்கு முன்பு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-விதியின் கீழ் கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் பெற்ற விவசாயிகளின் கடன் நிலுவை தொகையான ரூ.12 ஆயிரத்து 110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார். இதற்கான அரசாணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பை கேட்ட கூட்டுறவு வங்கிகளில் பயிர்கடன் வாங்கியிருந்த ஏராளமான விவசாயிகள் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்துள்ளனர். மேலும் பயிர்கடன் வாங்கி, அதனை திரும்ப செலுத்த முடியாமல் அவதியடைந்த  விவசாயிகளுக்கு முதல்-அமைச்சரின் அறிவிப்பு பெரும் ஆறுதலாக அமைந்துள்ளது.

விண்ணப்ப படிவம்

கடலூர் மாவட்டத்திற்கு பயிர்கடன் தள்ளுபடிக்காக சுமார் ரூ.592.45 கோடியை அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் சுமார் 90 ஆயிரம் விவசாயிகள் பயன்பெறுவார்கள். இதற்கிடையே பயிர்கடன் தள்ளுபடிக்காக தகுதியான விவசாயிகளிடம் கூட்டுறவு சங்கங்கள் மூலம் விண்ணப்ப படிவம் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் விவசாயிகளின் சுயவிவரம் குறித்த 28 வகையான கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. அதனை விவசாயிகள் பூர்த்தி செய்து வழங்கி வருகின்றனர்.

கணக்கெடுக்கும் பணி

இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் நந்தகுமார் கூறியதாவது:- மாவட்டத்தில் 159 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் உள்ளன. தமிழக அரசு அறிவித்த பயிர்கடன் தள்ளுபடிக்காக, இந்த சங்கங்களில் பயிர்கடன் வாங்கிய விவசாயிகளை கணக்கெடுக்கும் பணி தொடங்கி நடந்து வருகிறது. 31.1.2021-க்கு முன்பு வரை நிலுவையில் உள்ள பயிர்கடன் பெற்றவர்களுக்கே இந்த தள்ளுபடி உத்தரவு பொருந்தும்.
இந்த கணக்கெடுப்பு பணிக்காக ஒரு சார் பதிவாளர் மற்றும் மத்திய கூட்டுறவு வங்கி கள மேலாளர்கள் 2 பேர் கொண்ட 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களுக்கு சென்று தகுதியான விவசாயிகளை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி வருகிற 15-ந் தேதிக்குள் முடிக்கப்பட்டு, மாநில தலைமை கூட்டுறவு சங்கத்துக்கு தகுதியான விவசாயிகள் பட்டியல் அனுப்பி வைக்கப்படும்.

ரூ.592 கோடி 

பின்னர் அதன் அடிப்படையில் மாவட்டத்திற்கு பயிர்கடன் தொகை ஒதுக்கீடு செய்யப்படும். கடலூர் மாவட்டத்திற்கு சுமார் ரூ.592 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தகுதியான விவசாயிகள் பட்டியல் அந்தந்த தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகம், ஊராட்சி மன்ற அலுவலகங்களில் ஒட்டப்படும்.
இதில் பயிர்கடன் பெற்றுள்ள தகுதியான விவசாயிகள் பெயர் இடம்பெறவில்லை எனில், அவர்கள் உரிய ஆவணங்களுடன் துணை பதிவாளரை அணுகி, கடன் தள்ளுபடிக்காக மேல்முறையீடு செய்யலாம். அதன் அடிப்படையில் அவர்களுக்கும் பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார்.

மேலும் செய்திகள்