பாலின தேர்வு தடை சட்டத்தை மீறினால் கடும் நடவடிக்கை-கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி

கடலூர் மாவட்டத்தில் பாலின தேர்வு தடை செய்யும் சட்டத்தை மீறும் ஸ்கேன் மைய டாக்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தெரிவித்துள்ளார்.

Update: 2021-02-09 19:46 GMT
கடலூர்

கடலூர் தேவனாம்பட்டினத்தில் உள்ள இந்திய மருத்துவ சங்க அலுவலகத்தில் “பாலின தேர்வை தடை செய்தல் சட்டம்” குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி, பாலின தேர்வை தடை செய்தல் சட்டம் தொடர்பாக நீதிமன்ற வழக்குகளை சிறப்பாக கையாண்ட டாக்டர்கள், அரசு வக்கீல்கள் மற்றும் அரசு அலுவலர்களை பாராட்டி, சான்றிதழ்களை வழங்கினார்.

பின்னர் அவர் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் பாலின தேர்வு என்பது ஒரு சழுதாய நோயாக உள்ளது. இதனை நாம் ஒன்றிணைந்து பெண் குழந்தைகள் பிறப்பு விகிதத்தை உயர்த்த தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்.

தண்டனை

பாலின தேர்வு தடை செய்யும் சட்டத்தினை மீறும் ஸ்கேன் மைய டாக்டர்கள் மீது கடுமையான தண்டனை வழங்கப்படும். இச்சட்டத்தை மீறுபவர்கள் குறித்து தகவல் அறிந்தால், உடனடியாக மாவட்ட கலெக்டர், நலப்பணிகள் இணை இயக்குனர் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆகியோருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மேலும் இச்சட்டத்தை அனைத்து மருத்துவர்களும் முறையாக பின்பற்றி, மாவட்டத்தில் பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை உயர்த்திட தொடர்ந்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தகவல் பலகை

கடலூர் மாவட்டத்தில் சிசுவின் பாலினத்தை கண்டறிந்து தெரிவித்த 14 ஸ்கேன் மையங்கள் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது. மேலும் 683 கிராம பஞ்சாயத்துகளில் உள்ள 2342 கிராமங்களில் ஆண், பெண் குழந்தைகளின் பிறப்பு எண்ணிக்கை மற்றும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அறிய உதவும் தகவல் பலகை அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பெண் குழந்தைகள் பிறப்பு பாலின விகிதம் குறைவாக உள்ள கிராமங்களில் பெண் குழந்தைகளுக்கு மரக்கன்றுகள் வழங்கி, சிறப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது என்றார்.

மேலும் செய்திகள்