பாய்லர் ஆலை கூட்டுறவு வங்கியில் 35 பவுன் நகை திருட்டு

திருவெறும்பூர் அருகே பாய்லர் ஆலை கூட்டுறவு வங்கியில் 35 பவுன் நகைகள் திருட்டு போனது.

Update: 2021-02-09 19:34 GMT
திருவெறும்பூர்
கூட்டுறவு வங்கி
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே கைலாசபுரத்தில் பாய்லர் ஆலை (பெல்) உள்ளது. பொதுத்துறை நிறுவனமான இங்கு சுமார் 10 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். மேலும் இங்கு பாய்லர் ஆலை கூட்டுறவு தலைமை வங்கி  செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் பாய்லர் ஆலை ஊழியர்கள் கணக்குகள் வைத்துள்ளனர். இங்கு லாக்கர் வசதியும் உள்ளது. இதனை பெல் ஊழியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த லாக்கரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 30-ந்் தேதி பெல் குடியிருப்பு பி3 செக்டாரை சேர்ந்த சேகர் மகன் திலக் (வயது 22) என்பவர் தனக்கு சொந்தமான 35 பவுன் நகைகளை வைத்து இருந்தார்.
35 பவுன் நகைகள் திருட்டு
நேற்று முன்தினம் காலையில், அந்த வங்கியின் லாக்கரை பயன்படுத்தும் சக ஊழியர்களில் ஒருவர் திலக்கின் லாக்கர் பூட்டப் படாமல் உள்ளது குறித்து வங்கி அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில் வங்கி அதிகாரிகள் திலக்கிற்கு தகவல் கொடுத்தனர். அவர் வந்து பார்த்தபோது, லாக்கரில் இருந்த 35 பவுன் நகைகளை காணவில்லை. யாரோ திருடி சென்றுள்ளனர்.
இதுகுறித்து திலக் பாய்லர் ஆலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பிச்சையப்பா  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இந்த வங்கியில் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு பல லட்சம் மதிப்பிலான நகைகள் கொள்ளைபோனது. அதில் தொடர்புடைய குற்றவாளிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. இந்த நிலையில் மீண்டும் நகைகள் திருட்டு போன சம்பவம் பாய்லர் ஆலை ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்