திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது
திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது
அனுப்பர்பாளையம்:-
திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர்கள் சாவுக்கு காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சிறுவன் சாவு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 32). இவர் மனைவி ஆர்த்தி (25), மகன்கள் பிரவீன் (7), அனில் (2 ½), மகள் பிரியங்கா (4) ஆகியோருடன் திருப்பூர் அம்மாபாளையத்தை அடுத்த தண்ணீர்பந்தல்காலனி வீரப்பன் செட்டியார் தோட்டம் பகுதியில் வசித்து வந்தார்.
சந்தோஷ், ஆர்த்தி இருவரும் அருகில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை கணவன் மனைவி இருவரும் வழக்கம் போல வேலைக்கு சென்று விட்டனர். மதியம் சந்தோஷ் வீட்டிற்கு வந்தபோது சிறுவன் பிரவீன் வீட்டில் மயக்க நிலையில் படுத்திருந்தான். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் பிரவீனை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றார். அங்கு அவனை பரிசோதித்த மருத்துவர் பிரவீன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
சிறுமியும் பலி
இதையடுத்து மகனுடைய உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர். இதன் பின்பு சிறிது நேரத்தில் சந்தோஷின் 2-வது குழந்தையான சிறுமி பிரியங்கா வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் உடனடியாக அவளை டாக்டரிடம் பரிசோதனைக்காக பெற்றோர் அழைத்து சென்றுள்ளனர். சிறுமியை பரிசோதித்த டாக்டர் சிகிச்சைக்காக அனுமதிக்குமாறு கூறி உள்ளார். ஆனால் மகன் இறந்த துக்கத்தில் இருந்த பெற்றோர் தங்களது 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு சென்று விட்டனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு பிரியங்காவுக்கு மீண்டும் உடல்நிலை பாதிக்கப்பட்டதை தொடர்ந்து திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிறுமியை பரிசோதித்த மருத்துவர் அவள் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி உள்ளார். ஏற்கனவே மகன் இறந்த துக்கத்தில் இருந்த கணவன் மனைவி 2-வது குழந்தையான பிரியங்காவும் இறந்ததால் அதிர்ச்சி அடைந்தனர்.
உணவு காரணமா?
2 குழந்தைகளின் உடலையும் பார்த்து கதறி அழுத அவர்களை உறவினர்கள் ஆறுதல் படுத்தினார்கள். இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த 15 வேலம்பாளையம் போலீசார் சந்தோஷ், ஆர்த்தி ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்கள். பின்னர் உயிரிழந்த 2 குழந்தைகளின் உடல்களை போலீசார் பார்வையிட்ட போது உடலில் காயங்கள் எதுவும் இல்லாதது தெரிய வந்தது.
இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டது. பின்னர் பிரேத பரிசோதனை முடிந்து 2 உடல்களையும் போலீசார் பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தில் குழந்தைகள் சாப்பிட்ட உணவு மூலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூரில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.