டாக்டர்கள் தொடர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம்

கூட்டு மருத்துவ சிகிச்சை பாதிப்பு குறித்த விழிப்புணர்வுக்காக டாக்டர்கள் தொடர் மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடத்தினர்.

Update: 2021-02-09 18:15 GMT
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட இந்திய மருத்துவர் சங்கத்தினர் சார்பில், மத்திய அரசின் தேசிய கொள்கை 2020 வழியாக நிதி ஆயோக் அமைப்பு அறிமுகப்படுத்தி உள்ள மருத்துவ கல்வியை கைவிடக்கோரியும், 58 வகையான நவீன அறுவை சிகிச்சைகளை சால்ய தந்திரம் என்று பட்டியலிட்டு, மருத்துவ சிகிச்சைகளை ஆயுர்வேதம் பயிலும் மருத்துவர்கள் செய்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளதை திரும்பப்பெற வலியுறுத்தியும் முதற்கட்டமாக ஆர்ப்பாட்டமும், வேலை நிறுத்த போராட்டமும் நடத்தினர். 
இதைத்தொடர்ந்து 2-வது கட்டமாக, நவீன மருத்துவ சிகிச்சையில் யுனானி, ஆயுர்வேதம், சித்தா போன்றவற்றை கலந்து கூட்டு மருத்துவ சிகிச்சையாக செய்தால், பொதுமக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு இயக்கமாக கடந்த 1-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி தொடர் இருசக்கர வாகன ஊர்வலம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக மோட்டார் சைக்கிள் தொடர் ஊர்வலத்தில் திருச்சி குழுவினரிடம் இருந்து சங்க கொடியை பெரம்பலூர் இந்திய மருத்துவர் சங்கத்தினர் பெற்றுக்கொண்டனர். பின்னர் உளுந்தூர்பேட்டை வரை மோட்டார் சைக்கிள் தொடர் ஊர்வலம் நேற்று நடந்தது. 
ஊர்வலத்தை பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் இருந்து டாக்டர் பால் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மாவட்ட தலைவர் டாக்டர் செ.வல்லபன் தலைமையில் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செங்குட்டுவன், டாக்டர்கள் ராஜாமுகமது, கதிரவன், ரமேஷ் உள்ளிட்ட 20 பேர் கொண்ட மருத்துவர் குழுவினர் தொழுதூர், வேப்பூர் வழியாக உளுந்தூர்பேட்டை சென்று, அங்கு இந்திய மருத்துவர் சங்க கிளை நிர்வாகிகளிடம் கொடியை ஒப்படைத்துவிட்டு பெரம்பலூர் திரும்பினர்.

மேலும் செய்திகள்