காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுநீர் வெளியேற்றிய 28 ஆலைகளுக்கு சீல்
காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுநீரை வெளியேற்றிய 28 ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
காலிங்கராயன் வாய்க்காலில்
சாயக்கழிவுநீர் வெளியேற்றிய 28 ஆலைகளுக்கு சீல்
காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுநீரை வெளியேற்றிய 28 ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.
சாயக்கழிவுநீர் வெளியேற்றம்
காலிங்கராயன் வாய்க்கால் மூலமாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த பாசன பகுதிகளில் நெல், வாழை, கரும்பு, மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. ஈரோடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்படும் சாய, சலவை பட்டறைகளில் இருந்து காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுநீர் நேரடியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக விவசாயிகள் மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர்.
இந்தநிலையில் மொடக்குறிச்சி வி.பி.சிவசுப்பிரமணி எம்.எல்.ஏ. ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் செல்லும் காலிங்கராயன் வாய்க்காலில் நேற்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினார். இந்த சோதனையில் பல்வேறு சாய, சலவைப்பட்டறைகளில் இருந்து குழாய் அமைத்து காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுநீரை நேரடியாக கலந்து வருவது தெரியவந்தது. இது விவசாயிகளுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது.
28 ஆலைகள்
எம்.எல்.ஏ.வின் சோதனைக்கு பிறகு, மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தங்களது விசாரணையை தொடங்கினார்கள். அப்போது வெண்டிபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் சாய, சலவை, பிரிண்ட்டிங் பட்டறைகளில் இருந்து சாயக்கழிவு நீர் வெளியேற்றுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மொத்தம் 28 ஆலைகளுக்கு அதிகாரிகள் சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர்.
இதுகுறித்து காலிங்கராயன் பாசன விவசாயிகள் கூறியதாவது:-
காலிங்கராயன் வாய்க்காலில் சாயக்கழிவுநீர் கலப்பது தொடர் கதையாகி வருகிறது. நாங்களும் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். ஆனால் நிரந்தர தீர்வு எதுவும் எட்டப்படவில்லை. சாயப்பட்டறைகளில் இருந்து காலிங்கராயன் வாய்க்கால் வரை குழாய் அமைத்து சாயக்கழிவுநீரை வெளியேற்றுகிறார்கள். இந்த தண்ணீரை பாசனத்துக்கு பயன்படுத்தும்போது பயிர்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. மேலும், விவசாயிகளுக்கும் உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. எனவே மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் தொடர் ரோந்து பணியில் ஈடுபட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.