அந்தியூர் அருகே குடிநீர் சீராக வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அந்தியூர் அருகே குடிநீர் சீராக வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Update: 2021-02-08 23:15 GMT
அந்தியூர் அருகே
குடிநீர் சீராக வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
அந்தியூர் அருகே குடிநீர் சீராக வழங்கக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
சாலை மறியல்
அந்தியூர் அருகே உள்ள கிராமம் வெள்ளையம்பாளையம். இந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ளவர்களுக்கு குடிநீர் முறையாக வினியோகம் செய்யப்படவில்லை என கூறப்படுகிறது. 
இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் ஒன்று திரண்டு வெள்ளையம்பாளையம் பஸ் நிலைய பகுதிக்கு நேற்று காலை 8.30 மணி அளவில் வந்தனர். பின்னர் அவர்கள் அந்தியூரில் இருந்த ஆப்பக்கூடல் செல்லும் ரோட்டில் காலிக்குடங்களுடன் உட்கார்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் . 
பேச்சுவார்த்தை
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் துணை தாசில்தார் பிரகாஷ், வருவாய் ஆய்வாளர் உமா, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ராதாமணி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, கிராம நிர்வாக அதிகாரி முருகானந்தம், சின்னதம்பிபாளையம் ஊராட்சி தலைவர் சுமதி தவசியப்பன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 
அப்போது அதிகாரிகளிடம் பொதுமக்கள் கூறுகையில், ‘எங்கள் பகுதிக்கு ஊராட்சி நிர்வாகம் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த சில மாதங்களாக எங்களுக்கு மிகவும் குறைவான அளவே குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. போதுமான அளவு குடிநீர் கிடைக்காததால் நாங்கள் மிகவும் அவதிப்பட்டோம். குறிப்பாக கடந்த 8 நாட்களாக குடிநீர் வரவில்லை. எனவே எங்களுக்கு குடிநீர் சீராக வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என்றனர். 
போக்குவரத்து பாதிப்பு
இதற்கு பதில் அளித்த அதிகாரிகள், ‘குடிநீர் சீராக வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் தங்களுடைய சாலை மறியல் போராட்டத்தை 10.30 மணி அளவில் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். 
இந்த சாலை மறியல் போராட்டத்தால் அந்த பகுதியில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதன்காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்