ஈரோட்டில் பரிதாபம் காலிங்கராயன் வாய்க்காலில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி

ஈரோட்டில் காலிங்கராயன் வாய்க்காலில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-02-08 23:14 GMT
ஈரோட்டில் பரிதாபம்
காலிங்கராயன் வாய்க்காலில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பலி
ஈரோட்டில் காலிங்கராயன் வாய்க்காலில் மூழ்கி பிளஸ்-1 மாணவர் பரிதாபமாக இறந்தார்.
பிளஸ்-1 மாணவர்
ஈரோடு கருங்கல்பாளையம் ராஜாஜிபுரம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ். இவர் திருப்பூரில் உள்ள ஒரு ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் கிஷோர் (வயது 16). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் பிளஸ்-1 படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் தர்மராஜ் தனது மனைவி மற்றும் மகளுடன் உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார். கிஷோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளார். இதனால் அவர் தன்னுடைய நண்பர்களுடன் காலிங்கராயன் வாய்க்காலுக்கு குளிக்க சென்றார். பின்னர் அவர் வாய்க்காலில் குளித்தபோது எதிர்பாராதவிதமாக தண்ணீரில் இழுத்துச்செல்லப்பட்டார்.
தண்ணீரில் மூழ்கி சாவு
இதுபற்றிய தகவல் கிடைத்து அங்கு விரைந்து சென்ற அவருடைய பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் காலிங்கராயன் வாய்க்காலில் கிஷோரை தேடிப்பார்த்தனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை. இந்த நிலையில் நேற்று காலை தண்ணீரில் மூழ்கி இறந்த நிலையில் கிஷோரின் உடல் மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து இதுபற்றி ஈரோடு கருங்கல்பாளையம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கிஷோரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கருங்கல்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கிஷோரின் உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது பார்க்க பரிதாபமாக இருந்தது.

மேலும் செய்திகள்