ஆன்-லைன் வகுப்புகளைவிட நேரடியாக ஆசிரியர்கள் நடத்தும் பாடங்கள் எளிதில் புரிகிறது; மாணவ, மாணவிகள் கருத்து

ஆன்-லைன் வகுப்புகளை விட நேரடியாக ஆசிரியர்கள் நடத்தும்போதுதான் பாடங்கள் எளிதில் புரிகிறது என்று மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

Update: 2021-02-08 20:07 GMT
தர்ஷினி
பெரம்பலூர்:

9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறித்து மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியை ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர். அதன் விவரம் வருமாறு;-
பெற்றோருக்கு நிம்மதி
  பெரம்பலூர் அரசு பள்ளி 9-ம் வகுப்பு மாணவர் அபிவருண்:
  கொரோனாவால் 10 மாதங்கள் கழித்து மீ்ண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், நண்பர்களை நீண்ட நாட்கள் கழித்து சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். கொரோனா விடுமுறையால் படிக்காமல் நிறைய நாட்களை வீணாக்கி பெற்றோருக்கு சுமையாக இருந்து வந்தோம். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், இனி உள்ள நாட்களை ஆசிரியர்கள் சொல்படி கேட்டு படிப்பதற்கு செலவிடுவேன்.
  பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி 9-ம் வகுப்பு மாணவி தர்ஷினி:
  கல்வியாண்டில் முக்கால் பகுதி கொரோனா விடுமுறையில் கழிந்துவிட்டது. விடுமுறையில் வீட்டிலேயே முடங்கி கிடந்து பெற்றோருக்கு தொந்தரவு கொடுத்து வந்தோம். தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பெற்றோர் நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் தேர்வுக்கு பாடப்பிரிவுகளை அரசு குறைத்துள்ளதால், இனி படிப்பில் கவனம் செலுத்துவேன்.
எளிதாக புரிகிறது
  குரும்பலூர் அரசு பள்ளி 11-ம் வகுப்பு மாணவர் சூர்யகுமார்:
  கொரோனாவால் கடந்த ஆண்டு 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு எழுதாமலேயே அனைவரையும் தேர்ச்சி பெறச்செய்த முதல்-அமைச்சருக்கு மாணவர்கள் சார்பில் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். நான் 10-ம் வகுப்பில் காலாண்டு, அரையாண்டு தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்ததால் தற்போது 11-ம் வகுப்பில் நல்ல குரூப் கிடைத்துள்ளது. வீட்டில் செல்போன் உள்ளிட்டவையால் தேவையில்லாமல் நேரத்தை செலவிட்டு வந்தோம். தற்போது பள்ளி திறக்கப்பட்டு ஆசிரியர்கள் நேரடியாக பாடங்களை கற்பிப்பதால், பாடங்கள் எளிதாக புரிகிறது.
  குரும்பலூர் அரசு பள்ளி 11-ம் வகுப்பு மாணவி நித்யா:
  ஆன்-லைன் வகுப்பு மூலம் நடத்தப்பட்ட பாடங்கள் மாணவ- மாணவிகள் பலருக்கு புரிந்திருக்காது. நேரடியாக ஆசிரியர்கள் பாடங்கள் நடத்துவது தான் புரிகிறது. பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டது மிக்க மகிழ்ச்சி.
நல்வழிக்கு அழைத்து செல்வார்கள்
  பெரம்பலூர் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியின் தமிழ் ஆசிரியை மரகதம்:
  அரசின் கொரோனா வழிகாட்டுதலை முறையாக பின்பற்றி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மாணவிகளும் உற்சாகமாக பள்ளிக்கு வந்துள்ளனர். கொரோனா விடுமுறையால் ஆன்-லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டாலும், அவை மாணவிகளுக்கு சரியாக புரிவதில்லை. பாடங்களில் ஏற்பட்ட சந்தேகங்களுக்கு, சரியாக சொல்லி கொடுக்க வாய்ப்பில்லாமல் போனது. நேரடியாக ஆசிரியர்கள் பாடங்களை நடத்தினால்தான் மாணவ-மாணவிகளால் சரியாக கற்க முடியும். பள்ளிகளில் சக மாணவ-மாணவிகளுடன் சேர்ந்து படிக்கும்போது, இன்னும் அவர்கள் நன்றாக படிப்பார்கள். மேலும் ஆன்-லைன் வகுப்பிற்காக செல்போனை மாணவ- மாணவிகளுக்கு பெற்றோர் வாங்கி கொடுத்துள்ளனர். அதனால் சிலர் தவறான வழிக்கு செல்வதற்கு வாய்ப்புண்டு. பள்ளிகள் மூலம் மாணவ-மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாடங்களை கற்பிப்பதோடு, அவர்களை நல்வழிக்கு அழைத்து செல்வார்கள்.
  

மேலும் செய்திகள்