திண்டிவனத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கி ரூ.25 ஆயிரம் பறிப்பு
திண்டிவனத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கி ரூ.25 ஆயிரம் பறிப்பு
திண்டிவனம்,
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே உள்ள இறையானூர் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 38). மாற்றுத்திறனாளியான இவர் கடந்த 8 ஆண்டுகளாக திண்டிவனம் புதுச்சேரி சாலையில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் பங்க்கில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். செந்தில்குமார் மற்றும் அதேபகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரும் நேற்று அதிகாலை பெட்ரோல் பங்க்கில் பணியில் இருந்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 3 பேர் தாங்கள் வந்த வாகனத்துக்கு பெட்ரோல் போடுமாறு சுரேஷிடம் கூறினர். இதையடுத்து சுரேஷ் மோட்டார் சைக்கிளுக்கு பெட்ரோல் நிரம்பிக் கொண்டிருந்தார்.
அரிவாள் வெட்டு
அந்த சமயத்தில் 3 பேரில் ஒருவர் சுரேசை தாக்கி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, அவரிடம் இருந்த பணத்தையும், மற்றொரு நபர் பெட்ரோல் பங்க் அலுவலகத்தில் இருந்த செந்தில்குமாரை தாக்கி அரிவாளால் கையில் வெட்டி, அவரிடம் இருந்த பணத்தையும் பறித்தனர். பின்னர் அவர்கள் 2 பேரும், மோட்டார் சைக்கிளுடன் தயாராக இருந்த மற்றொரு நபருடன் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். மர்மநபர்கள் சுரேஷ், செந்தில்குமார் ஆகியோரிடம் இருந்து மொத்தம் ரூ.25 ஆயிரத்தை பறித்துச் சென்றனர்.
பரபரப்பு
இதனால் பதறிய பங்க் ஊழியர்கள் 2 பேரும் இதுபற்றி திண்டிவனம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சம்பவம் நடந்த இடத்தை பார்வையிட்டதோடு, கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து பணத்தை பறித்துச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். அதிகாலை நேரத்தில் பெட்ரோல் பங்க் ஊழியர்களை தாக்கி மர்மநபர்கள் பணத்தை பறித்துச் சென்ற சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.