பாலில் விஷம் கலந்த விவசாயி கைது
வந்தவாசி அருகே சொத்து தகராறு தாயை பழிவாங்க பாலில் விஷம் கலந்த விவசாயி கைது செய்யப்பட்டார்.
வந்தவாசி,
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெரேசாபுரத்தை சேர்ந்தவர் செல்வநாயகம். இவரது மனைவி மேரி. இவர்களுக்கு 2 மகன்கள், 2 மகள் உள்ளனர். மேரியின் பெயரில் உள்ள வீட்டுமனையை இரண்டாவது மகனான சதீஷ் மனைவி பெயரில் மேரி எழுதி வைத்ததாக கூறப்படுகிறது.
இதை அறிந்த மூத்த மகன் வினோத், தாய் மேரியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் தாய் மேரி மீது கோபத்தில் இருந்துள்ளார். அவரை பழிவாங்கவும் திட்டமிட்டுள்ளார்.
மேரி தனக்கு சொந்தமான பசுவின் பாலை கறந்து தனியார் பால் கம்பெனிக்கு வழங்குவது வழக்கம். அதன்படி மேரி பாலை எடுத்துக்கொண்டு பால் கொள்முதல் செய்யும் ஜான்பால் என்பவரிடம் வழங்க சென்றுள்ளார்.
பால் கேனை திறந்து பார்த்தபோது பாலின் நிறம் மாறியிருந்தது. மேலும் பாலில் இருந்து வித்தியாசமான வாடை வந்தது. இதனால் சந்தேகமடைந்த ஜான்பால் தெள்ளாறு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் பாலை கைப்பற்றி பரிசோதித்தனர்.
அந்தப் பாலில் விஷம் கலந்து இருப்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மேரி மற்றும் வினோத் ஆகியோரிடம் போலிசார் விசாரித்தனர். விசாரணையில் தாய் மீது இருந்த கோபதக்தில் பாலில் விஷம் கலந்ததாக வினோத் ஒப்புக்கொண்டார். அதைத் இன்ஸ்பெக்டர் அல்லிராணி வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தார்.