முள்ளுக்குறிச்சியில் ஜல்லிக்கட்டு; அடங்கமறுத்த காளைகளுடன் மல்லுக்கட்டிய காளையர்கள்

ராசிபுரம் அருகே முள்ளுக்குறிச்சியில் நடந்த ஜல்லிக்கட்டில் அடங்க மறுத்த காளைகளுடன், காளையர்கள் மல்லுக்கட்டினர். இதில் மாடுகள் முட்டியதில் 40 பேர் காயம் அடைந்தனர்.

Update: 2021-02-08 04:35 GMT
நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த முள்ளுக்குறிச்சி அருகே உள்ள தும்பல்பட்டியில் ராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள் சார்பில் தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நேற்று நடந்தது. இதற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார்.
ஜல்லிக்கட்டு போட்டியை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி, சமூகநலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் டாக்டர் சரோஜா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சந்திரசேகரன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்தி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

785 காளைகள்

இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்க நாமக்கல், சேலம், திருச்சி, மதுரை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 785 காளைகள் கொண்டு வரப்பட்டன. அவற்றை அடக்க 253 மாடுபிடி வீரர்கள் தயார் நிலையில் இருந்தனர். இவர்கள் 70 பேர் வீதம் பல்வேறு குழுக்களாக மைதானத்தில் அனுமதிக்கப்பட்டனர். ஜல்லிக்கட்டின் தொடக்கமாக கோவில் காளைகள் வாடிவாசலில் இருந்து விடப்பட்டன. பின்னர் ஒவ்வொரு காளையாக கயிறு அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்க முயன்றனர். அடக்க முற்படும் வீரர்களின் பிடியில் இருந்து மீள காளைகள் துள்ளிக்குதித்ததையும், வீரர்களை காளைகள் தூக்கி வீசியதையும் காண்போர் கண்களுக்கு விருந்தளித்தது.
 காளைகளை அடக்கிய வீரர்களுக்கு சில்வர் குடங்கள், மின்விசிறிகள் (டேபிள் பேன்) உள்பட பல்வேறு பொருட்களும், ரொக்கமும் பரிசாக வழங்கப்பட்டன. இதேபோல் அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டன. இந்த ஜல்லிக்கட்டில் சீறிப்பாய்ந்த காளைகளுடன் மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டிய காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்ததாக இருந்தது.

உறுதிமொழி ஏற்பு

முன்னதாக ஜல்லிக்கட்டு வீரர்கள் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு தொடர்பான விதிமுறைகளுக்கு உட்பட்டு சாதி, இன, வட்டார பாகுபாடின்றி அனைத்து வீரர்களும் ஒற்றுமையாக செயல்பட்டு, காளைகளை துன்புறுத்தாமல், அமைதியாக ஜல்லிக்கட்டை விளையாடுவோம் என உறுதிமொழி ஏற்று கொண்டனர்.

இதில் நாமக்கல் உதவி கலெக்டர் கோட்டைகுமார், ராசிபுரம் தாசில்தார் பாஸ்கரன், சேலம் கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் கே.பி.சுரேஷ்குமார், ராசிபுரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க தலைவர் இ.கே.பொன்னுசாமி, கார்கூடல்பட்டி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் கே.பி.சரவணன், ராசிபுரம் நகர கூட்டுறவு வங்கி தலைவர் பாலசுப்பிரமணியன், மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர் தாமோதரன், வெண்ணந்தூர் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் தங்கம்மாள் பிரகாசம், நாமகிரிப்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் ராஜேந்திரன், முள்ளுக்குறிச்சி ஊராட்சி தலைவர் கீர்த்திகா செல்வகுமார் மற்றும் ஜல்லிக்கட்டு போட்டி அமைப்பாளர்கள், வருவாய்த்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

40 பேர் காயம்

ஜல்லிக்கட்டில் தமிழ்செல்வன் (வயது 29), சந்திரசேகர் (21), கலை (22), ரஞ்சித் (28), கார்த்திக் (29), செல்வம் (27), கார்த்திக் (25), சவுந்தரபாண்டி (37), பிரேம் (21), கோகுல் (25), தினேஷ் (36), சுஜித் (21) உள்ளிட்ட 12 மாடுபிடி வீரர்கள், 21 காளைகளின் உரிமையாளர்கள், 4 பார்வையாளர்கள், ஒரு போலீஸ்காரர் உள்பட 40 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு நாமகிரிப்பேட்டை வட்டார மருத்துவ அலுவலர் தயாசங்கர் தலைமையில், மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் செவிலியர்களை உள்ளடக்கிய 56 பேர் கொண்ட மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். 

இதில் 8 பேர் ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கும், 2 பேர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கும் மேல் சிகிச்சைக்காக அழைத்து செல்லப்பட்டனர். மேலும் ஜல்லிக்கட்டில் பங்கேற்ற 8 மாடுகள் காயமடைந்தன. காலை 8.30 மணிக்கு தொடங்கிய ஜல்லிக்கட்டு, மாலை 5.20 மணி வரை நடந்தது. இதை காண ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, மெட்டாலா, திம்மநாயக்கன்பட்டி, முள்ளுக்குறிச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மைதானம் அருகே திரண்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்