திருவேற்காடு அருகே குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

திருவேற்காடு அருகே குடியிருப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2021-02-08 03:53 GMT
பூந்தமல்லி, 

திருவேற்காடு அடுத்த காடுவெட்டி பகுதியில் மேம்பால கட்டுமான பணிக்காக அங்குள்ள தனியார் கல்லூரிக்கு அருகே உள்ள குடியிருப்புகள் சிலவற்றை அகற்றுவதற்காக வருவாய்த்துறையினர் முடிவு செய்தனர். இதற்காக வீடுகளை காலி செய்யும்படி அந்த குடியிருப்புவாசிகளுக்கு நோட்டீஸ் வழங்கினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த குடியிருப்புவாசிகள், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று காலை தங்கள் குழந்தைகள், முதியவர்கள் என குடும்பத்துடன் காடுவெட்டி பகுதியில் உள்ள கல்லூரி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ரேஷன் கார்டுகளை ஒப்படைப்போம்

அப்போது அவர்கள், தங்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதுபற்றி தகவல் அறிந்ததும் உடனடியாக அங்கு வந்த திருவேற்காடு போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போக செய்தனர்.

சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறும்போது, “நாங்கள் 3 தலைமுறையாக இங்கு வசித்து வருகிறோம். நாங்கள் வசித்து வரும் சர்வே எண்ணில் பலருக்கு பட்டா வழங்கியுள்ளனர். ஆனால் எங்களுக்கு மட்டும் பட்டா வழங்கவில்லை. இதற்காக பல போராட்டங்கள் நடத்தி வருகிறோம். தற்போது போக்குவரத்துக்கு எந்த இடையூறும் இல்லாத எங்கள் நிலத்தை மேம்பால பணிக்காக நாங்கள் குடியிருக்கும் வீடுகளை அரசு இடிக்கவுள்ளது. எங்கள் வீடுகளை இடித்தால் ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை என அனைத்தையும் அரசிடம் ஒப்படைப்போம்” என்றனர்.

மேலும் செய்திகள்