மேட்டுப்பாளையத்துக்கு மயூரநாதர் கோவில் யானை பயணம்
புத்துணர்வு முகாமில் பங்கேற்க மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை மேட்டுப்பாளையத்துக்கு லாரியில் சென்றது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மயூரநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அபயாம்பிகை என்ற யானை உள்ளது. இந்த யானை ஆண்டுதோறும் மேட்டுப்பாளையத்தில் நடைபெறும் யானைகள் புத்துணர்வு முகாமில் கலந்து கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான யானைகள் புத்துணர்வு முகாம் இன்று(திங்கட்கிழமை) மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் தொடங்குகிறது.
லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது
இதையொட்டி மயிலாடுதுறை மயூரநாதர் கோவில் யானை அபயாம்பிகை நேற்று முன்தினம் இரவு யானைகள் நலவாழ்வு முகாமுக்கு லாரியில் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக, மயூரநாதர் கோவில் முன்பு யானை அபயாம்பிகைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் இளையராஜா, அறநிலையத்துறை மேலாளர் அரவிந்தன், மயூரநாதர் கோவில் துணை கண்காணிப்பாளர் கணேசன் ஆகியோர் யானை அபயாம்பிகையை வழியனுப்பி வைத்தனர்.
ஒப்பிலியப்பன் கோவில் யானை
ஒப்பிலியப்பன் கோவில் உதவி ஆணையர் ஜீவானந்தம் மற்றும் கால்நடை மருத்துவக்குழுவினர் நலவாழ்வு முகாமுக்கு யானை அபயாம்பிகையுடன் சென்றனர். இந்து சமய அறநிலையத்துறை மயிலாடுதுறை இணை ஆணையர் அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள மற்றொரு யானையான திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோவில் யானை பூமாவும் முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
திருக்கடையூர்
மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான மிகவும் பிரசித்தி பெற்ற அமிர்தகடேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தினந்தோறும் 1,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து சாமி தரிசனம் மற்றும் விசேஷ பூஜைகள் செய்து செல்கின்றனர். பிரசித்தி பெற்ற கோவிலில் 17 வயதுடைய அபிராமி யானை உள்ளது.
தற்போது கோவில்கள் மற்றும் மடங்களுக்கு சொந்தமான யானைகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் புத்துணர்வு அளிக்கும் வகையில் முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிற்கான முகாம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள தேக்கம்பட்டியில் நடக்கிறது. இதில் தமிழகத்தை சேர்ந்த பல்வேறு கோவில்களில் உள்ள யானைகள் கலந்து கொள்கின்றன.
ஆனால் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் யானை அபிராமிக்கு காலில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளதால், தொடர்ந்து நீண்ட நேரம் நிற்க முடியாது என மருத்துவர் சான்று அளித்ததின் பேரில் இந்த ஆண்டு அமிர்தகடேஸ்வரர் கோவில் யானை அபிராமி புத்துணர்வு முகாமிற்கு செல்லவில்லை என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.