சிங்கப்பூரில் இருந்து சிறப்பு விமானத்தில் கொரோனாவுடன் வந்த புதுக்கோட்டை பெண்; திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு
சிங்கப்பூரில் இருந்து சிறப்பு விமானத்தில் கொரோனாவுடன் வந்த புதுக்கோட்டை பெண்ணால் திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்க சிங்கப்பூர், மலேசியா, துபாய், மஸ்கட், ஓமன் உள்ளிட்ட நாடுகளில் இருந்து திருச்சிக்கு சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சிறப்பு விமானத்தில் பயணம் செய்யும் முன், எந்த நாட்டில் இருந்து பயணம் செய்ய இருக்கிறார்களோ அந்த நாட்டின் சார்பில், அந்த பயணிக்கு கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும்.
கொரோனா அறிகுறி இல்லை என்று அந்த நாட்டு அரசு சான்றிதழ் பெற்ற பின்பே சிறப்பு விமானத்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று இந்திய அரசு சார்பில் ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்படி தான் இதுவரை வெளிநாடுகளில் இருந்து பயணிகள் இந்தியாவுக்கு சிறப்பு விமானங்கள் மூலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
கொரோனா
இந்தநிலையில் சிங்கப்பூரில் இருந்து 169 பயணிகளுடன் ஏர்இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று காலை 7.30 மணிக்கு திருச்சிக்கு வந்தது. அதில் வந்த பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அந்த விமானத்தில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 38 வயது பெண் ஒருவர் “கொரோனா பாசிடிவ்” என்ற சான்றிதழுடன் பயணம் செய்ய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் அனுமதி அளித்திருந்தது தெரியவந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த விமான நிலைய அதிகாரிகள் உடனடியாக திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசுக்கும், நோய் தடுப்பு அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே விமான நிலையத்துக்கு விரைந்து வந்த அதிகாரிகள், அந்த பெண்ணை திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர்.
சக பயணிகள் பீதி
இந்த சம்பவத்தால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரம், அந்த பயணியை சோதனை செய்த அதிகாரிகளும், அந்த பயணியுடன் விமானத்தில் பயணம் செய்த 168 பயணிகளும் தங்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதா? என்று தெரியாமல் பீதியுடன் உள்ளனர்.
இந்திய அரசின் விதிகளை மீறி கொரோனா அறிகுறி உள்ள பயணியை அழைத்து வருவது திருச்சி விமான நிலையத்தில் கடந்த ஒரு வாரத்தில் இது 2-வது முறை ஆகும்.