கடலூர் அருகே, பெண் கொலை: தலைமறைவாக இருந்த பட்டதாரி வாலிபர் கைது
பெண் கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டாா்.
கடலூர்,
கடலூர் அருகே சாத்தங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 48). இறந்த இவரது அண்ணனின் இறுதிச்சடங்கு கடந்த 7.12.2020 அன்று நடந்தது. அந்த இறுதிச்சடங்கிற்கு வந்த அதே ஊரை சேர்ந்த சண்முகத்திடம் முன்விரோதம் காரணமாக வேல்முருகன் தகராறு செய்தார். இதில் அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த வேல்முருகன், அரவிந்த், ஆதித்யா, ரஞ்சித்குமார், பட்டதாரி வாலிபர் ராஜதுரை, சக்திவேல் ஆகிய 6 பேரும் சண்முகத்தை தாக்கினர். இதை அவரது தாய் லலிதா தட்டிக்கேட்டார். இதையடுத்து அவர்கள் 6 பேரும் லலிதாவை தாக்கினர். இதில் அவர் பலத்த காயத்துடன் உயிரிழந்தார்.
இது பற்றி சண்முகம் கொடுத்த புகாரின் பேரில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜதுரையை தவிர மற்ற 5 பேரையும் கைது செய்தனர். தலைமறைவான ராஜதுரையை தேடி வந்தனர்.
இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூரில் பதுங்கி இருந்த ராஜதுரையை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.