கடலூர் மாவட்டத்தில் 843 துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பு கலெக்டர் தகவல்

கடலூர் மாவட்டத்தில் 843 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் தெரிவித்தார்.

Update: 2021-02-07 20:03 GMT
கடலூர், 

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்குச்சாவடி மையத்திலும் இணைக்கப்பட்ட வாக்காளர் எண்ணிக்கை உச்சவரம்பை 1500-ல் இருந்து 1000 ஆக குறைத்து உத்தரவிட்டுள்ளது. 

அதன்படி கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 சட்டமன்ற தொகுதிகளிலும் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடிகளில் 1000 வாக்காளர்களுக்கு மேல் வாக்காளர் உள்ள வாக்குச்சாவடிகளை கண்டறிந்து துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டன.

ஆய்வுக்கூட்டம்

இந்நிலையில் துணை வாக்குச்சாவடி மையங்கள் அமைப்பது குறித்து அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-

உச்சவரம்பு குறைப்பு

கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி, விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, கடலூர், குறிஞ்சிப்பாடி, புவனகிரி, சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் ஆகிய 9 சட்டமன்ற தொகுதிகளிலும் 2295 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. 

இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த இந்திய தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர் எண்ணிக்கை உச்சவரம்பை 1500-ல் இருந்து 1000 ஆக குறைக்க உத்தரவிட்டது. அதன்படி 1000 வாக்காளர்களுக்கு மேல் உள்ள வாக்குச்சாவடிகளில் துணை வாக்குச்சாவடி அமைக்க கோட்ட அலுவலர்கள் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி முன்னிலையில் தேர்வு செய்தனர்.

துணை வாக்குச்சாவடிகள் 

அதன்படி தொகுதி வாரியாக திட்டக்குடியில் 70, விருத்தாசலம்-82, நெய்வேலி-87, பண்ருட்டி-95, கடலூர் -129, குறிஞ்சிப்பாடி-103, புவனகிரி-79, சிதம்பரம்-112, காட்டுமன்னார்கோவில்-86 என மொத்தம் 843 துணை வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு இறுதி செய்யப்பட்டு உள்ளன. 

இதன் மூலம் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 3138 ஆக உயர்ந்தது. இதில் அனைத்து வாக்காளர் வாக்குச்சாவடிகள் 1512, ஆண் வாக்காளர் வாக்குச்சாவடிகள் 813, பெண் வாக்காளர்கள் வாக்குச்சாவடிகள் 813 ஆகும்.

இவ்வாறு கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி பேசினார்.

கூட்டத்தில் கடலூர் கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், தேர்தல் தாசில்தார் பாலமுருகன், அ.தி.மு.க. நகர செயலாளர் குமரன், தி.மு.க. நாராயணசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாதவன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி குளோப், பகுஜன் சமாஜ் கட்சி சுரேஷ் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்