தொழில் முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலம் தமிழகம் -அமைச்சர் எம்சிசம்பத்

தொழில் முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது என்று கடலூரில் நடந்த தனியார் வேலைவாய்ப்பு முகாமில் அமைச்சர் எம்சிசம்பத் பேசினார்.

Update: 2021-02-07 17:10 GMT
கடலூர்:

கடலூர் மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து கடலூர் மஞ்சக்குப்பம் புனித வளனார் கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தினர். முகாமில் முன்னணி நிறுவனங்கள் என 171 நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான ஆட்களை தேர்வு செய்தனர். 

முகாமில் கலந்து கொள்வதற்காக ஆண்கள், பெண்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் குவிந்தனர். அவர்கள் தங்களுக்கு தேவையான நிறுவனங்களை தேர்வு செய்து, உரிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் பங்கேற்றனர். இறுதியில் 2 ஆயிரத்து 401 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணையை கலெக்டர் சந்திரசேகர் சாகமூரி தலைமையில் அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

திறன் பயிற்சிக்கு தேர்வு

மேலும் 2890 பேருக்கு 2-ம் கட்ட நேர்காணலுக்கான ஆணையையும் வழங்கினார். இந்த வேலைவாய்ப்பு முகாம் மூலம் 5291 பேர் பயன் அடைந்துள்ளனர். திறன் பயிற்சிக்கு விண்ணப்பித்தவர்களில் 228 பேர் பயிற்சிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

முகாமில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை மண்டல இணை இயக்குனர் வனிதா, கல்லூரி செயலாளர் பீட்டர் ராஜேந்திரம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் எகசானலி, கோட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், தாசில்தார் பலராமன், ஒன்றியக்குழு தலைவர் தெய்வ.பக்கிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

திறம்பட செயல்பட வேண்டும்

தொழில் நிறுவனங்கள் தாங்கள் நிர்ணயித்த இலக்கில் பணியாளர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு சிறந்த எதிர்காலம் கிடைக்கும். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் திறமை வாய்ந்தவர்கள். அவர்களை நிறுவனங்கள் வேலைக்கு தேர்வு செய்தால், உங்களுக்கு சிறந்த உழைப்பை வழங்குவார்கள்.

கொரோனா காலத்தில் மற்ற மாநிலங்களை விட சிறந்த முதலீட்டை பெற்று உள்ளோம். செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் அதன் உற்பத்தியை தொடங்க இருக்கின்றன. இங்கு வேலைக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் உடனடியாக வேலைக்கு சேர வேண்டும். தாமதப்படுத்தினால் அந்த வேலை வேறுஒருவருக்கு சென்று விடும். ஆகவே கிடைக்கிற வேலையை திறம்பட செய்ய வேண்டும். திறமையை வெளிப்படுத்தி உற்பத்தியை பெருக்க வேண்டும்.

சட்டம்-ஒழுங்கு

கிராமத்தில் உள்ள இளைஞர்கள் தான் பல்வேறு நாடுகளுக்கும் சென்று திறம்பட பணியாற்றி வருகிறார்கள். அதேபோல் நீங்களும் உங்கள் நிறுவனத்திற்கு சிறந்த பங்களிப்பை அளிக்க வேண்டும். மனித வளம் நிறைந்த மாநிலம். இதனால் தான் தொழில் முதலீட்டாளர்கள் தமிழகத்தை நோக்கி வருகிறார்கள். சாலை, ரெயில், விமானம், கப்பல் போக்‌குவரத்தும் இருப்பதால் முதலீட்டாளர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
சட்டம்-ஒழுங்கும் சிறப்பாக உள்ளது. இதனால் தொழில் முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது.
இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.

மேலும் செய்திகள்