வேலூரில் முதல்-அமைச்சரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிப்பு
வேலூரில் முதல்-அமைச்சரை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பேனர் கிழிக்கப்பட்டது.
வேலூர்
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை (செவ்வாய்க்கிழமை) வேலூர் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். அவரை வரவேற்க வேலூர் மாநகரின் முக்கிய பகுதிகளில் பெரிய அளவில் அ.தி.மு.க.வினர் பேனர் வைத்துள்ளனர். வேலூர் மக்கான் சிக்னல் பகுதியில் வேலூர் மாநகர் மாவட்ட மாணவரணி சார்பில் வைக்கப்பட்டிருந்த பேனர் பிளேடால் கிழிக்கப்பட்டிருந்தது.
அதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அ.தி.மு.க.வினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வேலூர் வடக்கு போலீசார் விசாரித்து மர்மநபர் மீது நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
இதேபோன்று கிரீன்சர்க்கிள் பகுதியில் முதல்-அமைச்சரை வரவேற்று அ.தி.மு.க.வினரும், பெங்களூருவில் இருந்து சென்னைக்கு செல்லும் சசிகலாவை வரவேற்று அ.ம.மு.க.வினரும் பேனர் வைத்திருந்தனர். ஒரே இடத்தில் இருகட்சியினரும் பேனர் வைத்திருப்பதால் அங்கு அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
சசிகலாவை வரவேற்க கிரீன் சர்க்கிள் பகுதியில் அ.ம.மு.க.வினர் திரளும்போது அங்குள்ள அ.தி.மு.க. பேனருக்கு சேதம் ஏற்பட்டால் பிரச்சினையாக மாறும் நிலை காணப்பட்டது. அதனால் கிரீன் சர்க்கிள் பகுதிக்கு பதிலாக வேலூர் கலெக்டர் அலுவலக மேம்பாலம் அருகே சசிகலாவை வரவேற்க அனுமதி அளிக்கப்பட்டது.