விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மயிலாடுதுறையில் விவசாயிகள் சாலை மறியல் பேராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலாடுதுறை,
டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்தும், அவர்கள் மீது போடப்பட்ட வழக்கை வாபஸ் பெறக் கோரியும் அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் துரைராஜ் தலைமை தாங்கினார். முன்னதாக கச்சேரி சாலையில் இருந்து விவசாயிகள் ஊர்வலமாக புறப்பட்டனர். பஸ் நிலையம் அருகே வந்தவுடன் காந்திஜி சாலையில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு கோரிக்கைகள்
போராட்டத்தின் போது அரசியல் அமைப்பு சட்டத்தில் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமையான போராடும் உரிமையை ஒடுக்கும் நோக்கத்தில் விவசாயிகளை தாக்கியதோடு, அவர்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும்.வேளாண் சட்டங்களை உடனடியாக மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும். விவசாயிகள் மற்றும் பத்திரிகையாளர்கள் மீது போட்டுள்ள பொய் வழக்கை திரும்ப ்பெற வேண்டும். காவிரி டெல்டா பகுதியில் சாகுபடி செய்து அறுவடை செய்யப்பட்ட நெல்லை தமிழக அரசு உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் காவிரி டெல்டா பாசனதாரர்கள் முன்னேற்ற சங்க தலைவர் குரு.கோபி கணேசன், பொதுச் செயலாளர் அன்பழகன், விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் ரவிச்சந்திரன், இயற்கை விவசாயி ராமலிங்கம் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் ½ மணி நேரம் இந்த போராட்டம் நடந்தது. அதன் பின்னர் விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சீர்காழி
இதேபோல் சீர்காழி புதிய பஸ் நிலையம் எதிரில் டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகளை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செல்லப்பன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி வட்ட செயலாளர் ஜீவானந்தம், விவசாய சங்க மாவட்ட தலைவர் வீரராஜ், விவசாய சங்க மாவட்ட துணைத் தலைவர் நாகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
38 பேர் கைது
சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்க ஒன்றிய செயலாளர் வரதராஜன், விவசாய சங்க மாவட்ட குழு உறுப்பினர் ஞானபிரகாசம், கட்சி நிர்வாகிகள் கலியமூர்த்தி, அசோகன், நீதிசோழன், ஜெயக்குமார், பிரபாகரன் பாஸ்கர் உள்பட 38 பேரை போலீசார் கைது செய்தனர்.
பின்னர் அவர்களை தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர். மறியல் போராட்டத்தால் மயிலாடுதுறை- சிதம்பரம் சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.