அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி வத்திராயிருப்பில் அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 40 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-02-07 06:00 GMT
வத்திராயிருப்பு,


வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதிய  திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அரசு அலுவலகங்களில் உள்ள காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.  பறிக்கப்பட்ட உரிமைகளை உடனடியாக அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டம் 

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் பால்முருகன் தலைமை தாங்கினார்.  மாவட்டச் செயலாளர் கருப்பையா கோரிக்கைகள் குறித்து பேசினார். முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, நீதித்துறை மாவட்ட செயலாளர் சுந்தரராஜன், நாம் தமிழர் கட்சி மேற்கு மாவட்ட செயலாளர் பாலன், விவசாய சங்க மாவட்டத்தலைவர் சந்திரமோகன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

கைது 

சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் 40-க்கும் மேற்பட்டவர்களை வத்திராயிருப்பு போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்