முதல்-அமைச்சர், விவசாய கடனை தள்ளுபடி செய்தது பாராட்டுக்குரியது அல்ல; கே.எஸ்.அழகிரி பேட்டி

எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன என தெரிந்து கொண்டு முதல்-அமைச்சர், விவசாய கடனை தள்ளுபடி செய்தது பாராட்டுக்குரியது அல்ல என்று கே.எஸ்.அழகிரி கூறினாா்.

Update: 2021-02-07 00:20 GMT
மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரியும், அதற்காக டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் திருச்சி மாவட்டம் முசிறியில் காங்கிரஸ் கட்சி சார்பில் நேற்று நடந்த ஏர் கலப்பை பேரணியில் கலந்து கொள்வதற்காக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கார் மூலம் சென்னையில் இருந்து பெரம்பலூர் வழியாக சென்றார். அப்போது பெரம்பலூரில் அவருக்கு, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன், மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகிேயார் தலைமையில், அக்கட்சியினர் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து கே.எஸ்.அழகிரி, நிருபர்களிடம் கூறுகையில், தமிழக அரசு விவசாயிகளுடைய பயிர்க்கடனை தள்ளுபடி செய்திருப்பதாக, 110-வது விதியின் கீழ் முதல்-அமைச்சர் கூறியிருக்கிறார். 

தேர்தல் வருகிற நேரத்தில் எதிர்க்கட்சி தலைவர், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாய கடனை தள்ளுபடி செய்வோம், என்று சொன்ன பிறகு, முதல்-அமைச்சர் தள்ளுபடி செய்வது என்பது அப்பட்டமான சந்தர்ப்பவாதம் ஆகும். தமிழக அரசுக்கு, அப்படி விவசாயிகளின் மீது எண்ணம் இருந்திருந்தால் அதிகாரத்தில் இருப்பவர்கள், விவசாயிகள் கடன் சுமையால் துவண்டபோது அதனை அவர்கள் தள்ளுபடி செய்திருக்கலாம். ஆனால் எதிர்க்கட்சிகள் என்ன செய்கின்றன, விவசாயிகள் என்ன கருதுகிறார்கள் என்பதையெல்லாம் தெரிந்து கொண்ட பிறகு முதல்-அமைச்சர் அறிவித்திருப்பது பாராட்டுக்குரியது அல்ல, ஏற்புடையது அல்ல, என்றார்.

மேலும் செய்திகள்