விருத்தாசலம் அருகே ஆசிரியையிடம் நகை பறிக்க முயன்றவர் கைது
விருத்தாசலம் அருகே ஆசிாியையிடம் நகை பறிக்க முயன்றவரை போலீசாா் கைது செய்தனா்.
கம்மாபுரம்,
கடலூா் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த அரசக்குழியை சேர்ந்தவர் கெவின்வெஸல்ஸ் மனைவி சோபியாஜெயந்தி (வயது 33). இவர் விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார்.
சம்பவத்தன்று சோபியா ஜெயந்தி வீட்டில் இருந்த போது, அங்கு வந்த ஒருவர், உங்கள் வீட்டில் பழுதாகி உள்ள கிரைண்டரை சரிசெய்ய வந்துள்ளதாக கூறியுள்ளாா். இதை உண்மை என்று நம்பிய சோபியா ஜெயந்தி அவரை வீட்டிற்குள் அனுமதித்துள்ளார். வீட்டிற்குள் வந்த அந்த நபர், திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், சோபியா ஜெயந்தியின் கழுத்தில் வைத்து மிரட்டி, கழுத்தில் அணிந்திருந்த நகையை கழற்றுமாறு கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சோபியாஜெயந்தி அந்த நபரின் கையை பிடித்துக்கொண்டு சத்தம் போட்டார். இவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து அந்த நபரை பிடித்து ஊ.மங்கலம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் வடலூர் எம்.எஸ்.டி. நகரை சேர்ந்த தயாநிதி(59) என்பது தெரியவந்தது. இதையடுத்து தயாநிதியை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.