முத்துப்பேட்டையில் மாடுகளை பிடித்து பேரூராட்சி அலுவலகத்தில் விடும் போராட்டம்
முத்துப்பேட்டையில் கேட்பாரற்று சாலையில் திரியும் மாடுகளை பிடித்து பேரூராட்சி அலுவலகத்தில் விடும் போராட்டம் நடத்த போலீசாரிடம் வர்த்தகர்கள் மனு அளித்தனர்.
முத்துப்பேட்டை,
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை வர்த்தகர் கழக தலைவர் மெட்ரோ மாலிக் தலைமையில் பொதுச்செயலாளர் ராஜாராமன், துணைத்தலைவர்கள் நெய்னா முகமது, ஆரோக்கிய அந்தோணிராஜ், துணைச்செயலாளர்கள் கிஷோர், சுரேஷ், மூத்த உறுப்பினர் இர்பான் ஹைதர்அலி உள்ளிட்ட ஏராளமான வியாபாரிகள் முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்துக்கு சென்று இன்ஸ்பெக்டர் செந்தூர் பாண்டியனிடம் கோரிக்கை மனு அளித்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:-
முத்துப்பேட்டை நகரில் சில வருடங்களாக சுற்றித்திரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளால் வியாபாரிகள், பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். நகரில் ஆங்காங்கே சுற்றித்திரியும் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறுகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி சிறுவர்கள் முதியவர்கள் பெண்களை முட்டி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையே அடிக்கடி மாடுகள் குறுக்கே செல்வதால் விபத்துக்கள் ஏற்படுகிறது.
மேலும் கடைகளில் முன்பக்க பொருட்களைகளையும் மாடுகள் சேதப்படுத்தி வருகிறது. சாலையில் கேட்பாரற்று திரியும் மாடுகளால் வியாபாரிகள் பொதுமக்கள் நாள்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகத்திடமும் போலீசாரிடமும் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே வருகிற 22-ந் தேதி(திங்கட்கிழமை) முத்துப்பேட்டை வர்த்தகக்கழகம் சார்பில் வியாபாரிகள் அனைவரும் முத்துப்பேட்டையில் கேட்பாரற்று சுற்றித்திரியும் மாடுகளை பிடித்து கொண்டு வந்து பேரூராட்சி அலுவலக வளாகத்துக்குள் விட்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளோம். இந்த போராட்டத்துக்கு போலீசார் அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டியன் இதுகுறித்து உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். மாடுகளை பிடித்து பேரூராட்சி அலுவலக வளாகத்துக்குள் விட்டு போராட்டத்தில் ஈடுபட அனுமதி வழங்கக்கோரி வியாபாரிகள் திரண்டு சென்று போலீஸ் நிலையத்தில் மனு அளித்த சம்பவம் முத்துப்பேட்டை பகுதியில் பரபரப்பை ஏற்டுத்தியது.