ராமேசுவரம் கோவில் யானை ராமலட்சுமி அனுப்பி வைப்பு

ராமேசுவரம் கோவில் யானை லாரி மூலம் புத்துணர்வு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2021-02-06 17:36 GMT
ராமேசுவரம், 

தமிழகம் முழுவதும் உள்ள கோவில்களில் உள்ள யானை களுக்கான சிறப்பு புத்துணர்வு நலவாழ்வு முகாம் கோவை மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி வனப்பகுதியில்  48 நாட்கள் நடைபெறுகிறது.

இந்த நிலையில் யானைகள் புத்துணர்வு நலவாழ்வு முகாமுக்கு ராமேசுவரம் கோவில் யானை ராமலட்சுமி நேற்று இரவு லாரி மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. முன்னதாக கோவிலின் 3-ம் பிரகாரத்தில் யானை ராமலட்சுமிக்கு சிறப்பு கஜ பூஜை மற்றும் தீபாராதனை பூஜை நடந்தது.

இந்த பூஜையில் கோவிலின் சூப்பிரண்டுகள் ககாரின் ராஜ், பாலசுப்பிரமணியன், பேஷ்கார்கள் அண்ணாதுரை, கமல நாதன், கண்ணன், செல்லம், கலைச்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர். 

கோவிலில் இருந்து சன்னதி தெரு வழியாக அழைத்துவரப் பட்ட கோவில் யானை ராமலட்சுமி அக்னி தீர்த்த கடற்கரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரியின் மீது சுலபமாக ஏறி நின்று தும்பிக்கையை தூக்கி கையசைத்தது. இதை அங்கு நின்ற ஏராளமான பக்தர்கள் பார்த்து ரசித்தனர்.

ராமேசுவரம் கோவில் யானை இதுவரையிலும் 8 முறை புத்துணர்வு முகாம் சென்றுள்ளது. தற்போது 9-வது முறையாக முகாமுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்