டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை வலுப்படுத்த ஒரு லட்சம் தேங்காய்கள் டெல்லிக்கு அனுப்ப முடிவு

டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை வலுப்படுத்த ஒரு லட்சம் தேங்காய்கள் டெல்லிக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க தேசிய ஒருங்கிணைப்பாளர் கூறினார்

Update: 2021-02-06 17:09 GMT
திருப்பூர்,

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் நல்லா கவுண்டர் திருப்பூரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு நிறைவேற்றி உள்ள, 3 வேளாண் திருத்த சட்டங்களை எதிர்த்து கடந்த இரண்டரை மாத காலமாக விவசாயிகள் டெல்லியில் போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தை சிதைக்கும் நோக்கில், டிராக்டர் பேரணியில் மத்திய அரசே வன்முறையாளர்களை ஏவிவிட்டு, விவசாயிகளுக்கு அவப்பெயரை ஏற்படுத்தியது.
டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்துக்கு மற்ற மாநிலங்களில் விவசாயிகளிடம் ஆதரவு இல்லை என்று சொல்வது, தவறான பிரசாரம்.

டெல்லி நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்தை வலுப்படுத்த தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில், ஒவ்வொரு தோட்டத்தில் இருந்து 10 தேங்காய்கள் வீதம், ஒரு லட்சம் தேங்காய்களை அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளோம். இதை ஒருவார காலத்துக்குள் செய்ய உள்ளோம். கோவை, திருப்பூர் மாவட்ட பகுதிகளில் தேங்காய் சேகரிக்கும் பணி தொடங்கி உள்ளது. டெல்லியில் நெல், கோதுமை மற்றும் காய்கறிகள் விளைகிறது. ஆனால் தேங்காய் விளைச்சல் இல்லை. ஆகவே தமிழக விவசாயிகளின் பங்களிப்பாக தேங்காய்களை, மிக பிரமாண்டமாக டெல்லிக்கு தேங்காய் அனுப்பும் விழாவை நடத்த உள்ளோம். இதையடுத்து தமிழகத்தில் இருந்து 100 பேர் டெல்லியில் நடைபெறும் போராட்டத்தில் பங்கேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவனர் வக்கீல் ஈசன், தலைவர் சண்முகசுந்தரம், அமைப்பு செயலாளர் பழ.ரகுபதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்