24 ஆயிரத்து 337 விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி
ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வரின் அறிவிப்பின்படி 24 ஆயிரத்து 337 விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட உள்ளது.
ராமநாதபுரம்,
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றும் புயல், மழை வெள்ளம் போன்றவற்றால் கடும் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகளின் கடன் சுமையை முற்றிலும் குறைத்திடும் வகையில் 16லட்சத்து 43ஆயிரத்து 347 விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன் தொகை ரூ.12 ஆயிரத்து 110 கோடியே 74 லட்சம் தள்ளுபடி செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடலில் 110 விதியின் கீழ் இந்த அதிரடி அறிவிப்பை முதல்-அமைச்சர் வெளியிட்டதை தொடர்ந்து விவசாயிகள் மத்தியில் பெரும் வரவேற்பு ஏற்பட்டுள்ளது. இதன்படி தமிழகத்திலேயே அதிகபட்சமாக சேலம் மாவட்டத்தில் 1லட்சத்து 65 ஆயிரத்து 776 விவசாயிகளின் ரூ.1,356 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது.
இதற்கு அடுத்தபடியாக திருச்சியில் ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 805 விவசாயிகளின் ரூ.1,329 கோடி கடன் தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு ராமநாதபுரம் மாவட்டத்தில் 24 ஆயிரத்து 337 விவசாயிகளின் ரூ.101 கோடியே 54 லட்சம் கடன் தொகை தள்ளுபடி செய்யப்படுகிறது.