முதற்கட்டமாக மதுரை-விருதுநகர் இரட்டை பாதை பணியை முடிக்க வேண்டும்

ரெயில் போக்குவரத்து சிரமங்களை குறைக்க முதற்கட்டமாக மதுரை-விருதுநகர் இரட்டை ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும். கூடுதல் நிதி ஒதுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Update: 2021-02-06 07:11 GMT
விருதுநகர்,

ரெயில் போக்குவரத்து சிரமங்களை குறைக்க முதற்கட்டமாக மதுரை-விருதுநகர் இரட்டை ரெயில் பாதை பணியை விரைந்து முடிக்க வேண்டும். கூடுதல் நிதி ஒதுக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இருவழி ெரயில் பாதை

 மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கான ெரயில் பாதையை இருவழி ெரயில் பாதையாக மாற்ற வேண்டும் என தென் மாவட்ட மக்கள் நீண்ட நாட்களாக வலியுறுத்தி வந்தனர். இதன்பேரில் கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு இருவழி ரெயில் பாதை திட்டத்தை அறிவித்தது.
அதன்படி அப்போதைய ெரயில்வே துறை இணை மந்திரியாக இருந்த ரஞ்சன் கோகாய் நாகர்கோவிலில் வைத்து இருவழி ெரயில் பாதை திட்டப்பணியை தொடங்கி வைத்தார். இத்திட்ட பணிகள் வருகிற 2021-ம் ஆண்டிற்குள் முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டது. மதுரையில் இருந்து வாஞ்சி மணியாச்சி வரையிலும், வாஞ்சி மணியாட்சியில் இருந்து தூத்துக்குடி மற்றும் நாகர்கோவில் வரையிலும் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டது 
 கொரோனா பாதிப்பால் இருவழி ெரயில் திட்ட பணிகள் பாதிப்படைந்த நிலையில் இத்திட்டம் 2022-ம் ஆண்டு இறுதியில் பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் இத்திட்டத்துக்கான முழுமையான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

மதுரை-விருதுநகர்

வருகிற நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மதுரையில் இருந்து வாஞ்சிமணியாச்சி வரையிலான 160 கிலோமீட்டர் தூரத்துக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. முதலில் மதுரையில் இருந்து விருதுநகர் வரையிலான இருவழி ெரயில் பாதை திட்ட பணிகள் முழுமையாக முடிக்கப்படாத நிலையே நீடிக்கிறது. 
மதுரையில் இருந்து பழங்காநத்தம் வரையிலும் பணி முடிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து திருமங்கலம் வரையிலும் பணிகள் முடிவடையாத நிலைநீடிக்கிறது. திருமங்கலத்தில் இருந்து கள்ளிகுடி வரையிலும் திட்டப் பணி நிறைவு பெற்றுள்ள நிலையில் கள்ளிக்குடியில் இருந்து விருதுநகர் வரையிலும் பணிகள் முடிக்கப்படாமல் கிடப்பில் உள்ளன.
 மதுரையில் இருந்து விருதுநகர் வரையிலான இருவழி பாதை ெரயில் பாதை முடிக்கப்பட்டால் தென் மாவட்டங்களில் இருந்து செல்லும் ெரயில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. எனவே இந்த பகுதியில் உள்ள திட்டப்பணியை முழுமையாக முடிக்கப்பட வேண்டியது அவசியமாகும்.

குறைந்த நிதி ஒதுக்கீடு 

இந்த நிலையில் மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை வழியாக தூத்துக்குடி வரையிலான 143 கிலோமீட்டர் தூர அகலரெயில்பாதை பணி கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டது. இந்த ெரயில்பாதை பணி முடிவடைந்தால் தூத்துக்குடியில் இருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் சரக்கு ெரயில்கள் மற்றும் நெடுந்தூர ெரயில்கள் அந்த வழியே இயக்கப்பட்டால் மதுரையில் இருந்து நெல்லை, நாகர்கோவில் மற்றும் கேரளாவுக்கு செல்லும் பயணிகள் ெரயில் வேகத்தை அதிகரிக்கவும் அதிக எண்ணிக்கையில் எக்ஸ்பிரஸ் ெரயில்களை இயக்கவும் வாய்ப்பு ஏற்படும்.
 ஆனால் இந்த நிதி ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் மதுரை- தூத்துக்குடி அகல ரெயில்பாதை திட்டப்பணிக்கு ரூ.20 கோடி மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிதி கொண்டு நிலம் கையகப்படுத்தும் பணியை கூட முழுமையாக முடிக்க இயலாது. இதே நிலையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டால் மதுரை-தூத்துக்குடி அகல ரெயில் பாதை திட்டப்பணி முடிவடைவதற்கு இன்னும் 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிடும். இது தவிர்க்கப்பட வேண்டும்.
 மேலும் தூத்துக்குடியில் இருந்து கன்னியாகுமரி வரையிலான 86 கிலோ மீட்டர் இருவழி ெரயில் திட்டப் பணிக்கு பொதுவாக ரூ.275 கோடியும் மதுரையிலிருந்து வாஞ்சி மணியாட்சி வரையிலான 160 கிலோமீட்டர் இருவழி ெரயில்பாதை திட்டப்பணிக்கு ரூ.300 கோடியும், வாஞ்சி மணியாச்சி இருந்து நாகர்கோவில் வரையிலான 102 கிலோ மீட்டர் அகல ரெயில் பாதை திட்டப்பணிக்கு ரூ.200 கோடி மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அளவிலான நிதி ஒதுக்கீட்டில் தென்மாவட்டங்களுக்கான இருவழி ெரயில் பாதை திட்டப்பணியை விரைவாக முடிக்க வாய்ப்பு ஏற்படாது.

 கோரிக்கை 

ஏற்கனவே மத்திய அரசு அதிக நிதி ஒதுக்கீடு செய்து இருவழி ரெயில்பாதை திட்டப்பணியினை விரைந்து முடித்தால் மதுரையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் ெரயில் பாதையில் போக்குவரத்து நெரிசல் குறைந்து அதிக எண்ணிக்கையில் எக்ஸ்பிரஸ் ரெயில்களை இயக்க வாய்ப்பு ஏற்படும். மேலும் மதுரை-தூத்துக்குடி அகல ரெயில்பாதை திட்டபணிக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டியதும் அவசியமாகும்.

மேலும் செய்திகள்